குடகில் மழைவெள்ளம்-நிலச்சரிவால் பாதிக்கப்பட்டு நிவாரண முகாமில் இருந்த பெண்ணுக்கு திருமணம்

குடகில் மழை வெள்ளம்-நிலச்சரிவால் பாதிக்கப்பட்டு நிவாரண முகாமில் இருந்த பெண்ணுக்கு திருமணம் நடந்தது. அவர் கேரளாவை சேர்ந்தவரை கரம் பிடித்தார்.

Update: 2018-08-26 23:17 GMT
பெங்களூரு,

குடகு மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இடைவிடாது பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதன்காரணமாக மாவட்டம் முழுவதும் வரலாறு காணாத சேதம் ஏற்பட்டுள்ளது. மழை வெள்ளம், நிலச்சரிவு காரணமாக சுமார் 4 ஆயிரம் பேர் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர். இந்த நிலையில் எம்மேட்டு பகுதியை சேர்ந்த மஞ்சுளாவுக்கு 26-ந்தேதி (அதாவது நேற்று) கேரளா மாநிலம் கண்ணூரை சேர்ந்த ராஜீஷ் என்பவருடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில் குடகில் ஏற்பட்ட நிலச்சரிவால், மஞ்சுளாவின் வீடு இடிந்து விழுந் தது. அதிர்ஷ்டவசமாக மஞ்சுளா மற்றும் அவருடைய பெற்றோர் உயிர் தப்பினர். தற்போது அவர்கள் மக்கந்தூரில் உள்ள நிவாரண முகாமில் தஞ்சமடைந்துள்ளனர். ஆனால் அவர்கள் திருமணத்துக்காக சேர்த்து வைத்திருந்த நகை-பணம், பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை. இதனால் திட்டமிட்டப்படி 26-ந்தேதி மஞ்சளாவின் திருமணம் நடைபெறுமா? என்று கேள்வி எழுந்தது.

திருமணம் நடக்குமா? நடக்காதா? என்ற ஏக்கத்துடன் மஞ்சுளாவும் அவருடைய குடும்பத்தினரும் நிவாரண முகாமில் இருந்தனர். இந்த நிலையில் நிவாரண முகாமில் இருந்தவர்களும், தன்னார்வ தொண்டு அமைப்பினரும், மாவட்ட நிர்வாகமும் சேர்ந்து மஞ்சுளாவின் திருமணத்தை திட்டமிட்டப்படி நடத்த அனைத்து ஏற்பாடுகளையும் செய்தனர். இதற்கிடையே, இதுபற்றி தகவல் அறிந்த முதல்-மந்திரி குமாரசாமியும், மாநில அரசு சார்பில் மஞ்சுளாவின் திருமணத்துக்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் திட்டமிட்டப்படி நேற்று மடிகேரி ஓம்காரேஸ்வரா கோவிலில் மஞ்சுளா-ராஜீஷ் திருமணம் நடந்தது. தன்னார்வ தொண்டு அமைப்பினர், நிவாரண முகாம்களில் இருந்த மக்கள் முன்னிலையில் ராஜீஷ், மஞ்சுளா கழுத்தில் தாலி கட்டினார். இதில் நிவாரண முகாமில் இருந்த மக்கள், தன்னார்வ தொண்டு அமைப்பினர் என நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டு புதுமண ஜோடியை வாழ்த்தினர். திட்டமிட்டப்படி மஞ்சுளாவின் திருமணம் நடந்ததால், அவருடைய குடும்பத்தினர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்த திருமணத்தில் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவித்யா கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். திருமணமான இருவரும், வீடு, உடைமைகளை இழந்ததால் புதுமண தம்பதியினருக்கு அரசு சார்பில் ஸ்ரீவித்யா, ரூ.50 ஆயிரம் நிதி உதவி வழங்கினார்.

இதேபோல அடுத்த மாதம் (செப்டம்பர்) 12-ந்தேதி, அதேப்பகுதியை சேர்ந்த ரஞ்சிதா என்பவருக்கும், கேரளாவை சேர்ந்த ஒருவருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. அந்த திருமணத்தையும் நடத்தி வைப்போம் என்று தன்னார்வ தொண்டு அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்