சாலையில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் தொற்றுநோய் பரவும் அபாயம்
தாம்பரம் சானடோரியம் பஸ் நிறுத்தம் அருகே சர்வீஸ் சாலையில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.
தாம்பரம்,
சென்னையை அடுத்த தாம்பரம் சானடோரியம் பஸ் நிறுத்தம் அருகில் உள்ள சர்வீஸ் சாலை வழியாக தினமும் ஆயிரக்கணக்கானோர் தாம்பரம் மெப்ஸ் ஏற்றுமதி வளாகத்துக்கு வேலைக்கு வந்து செல்கின்றனர். சானடோரியம் ரெயில் நிலையத்தில் இருந்து தாம்பரம் கோர்ட்டு, கோட்டாட்சியர் அலுவலகம், தாசில்தார் அலுவலகம், உணவுபொருள் வழங்கல் துறை உதவி ஆணையர் அலுவலகம் வருபவர்களும் இந்த சாலையைத்தான் பயன்படுத்தி வருகின்றனர்.
தாம்பரம் மெப்ஸ் சிக்னலில் இருந்து கிழக்கு தாம்பரம், சிட்லபாக்கம் பகுதிகளுக்கு சானடோரியம் ரெயில்வே மேம்பாலம் வழியாக செல்லும் இருசக்கர வாகனங்களும் இந்த சாலை வழியாகவே செல்கின்றன.
அந்த பகுதியில் உள்ள கால்வாயில் ஏற்பட்டுள்ள அடைப்பு காரணமாக கடைகள், வணிக நிறுவனங்கள், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் கால்வாயில் இருந்து வெளியேறி மிகமுக்கியமான இந்த சர்வீஸ் சாலையில் தேங்கி நிற்கிறது.
கடந்த 1 மாதங்களுக்கு மேலாக இவ்வாறு சாலையில் கழிவுநீர் குளம்போல் தேங்கி நிற்பதால் அந்த பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அந்த வழியாக நடந்து செல்பவர்கள், பஸ் நிறுத்தத்தில் காத்து நிற்கும் பயணிகள், இருசக்கர வாகன ஓட்டிகள் என அனைத்து தரப்பினரும் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.
தேங்கி நிற்கும் கழிவுநீரில் கொசுக்கள் உற்பத்தியாவதால், அந்த பகுதியில் தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. ஆனால் கால்வாயில் உள்ள அடைப்புகளை அகற்றி, கழிவுநீர் முறையாக வெளியேற வழிவகை செய்யாததுடன், சர்வீஸ் சாலையில் தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்றவும் தாம்பரம் நகராட்சி அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்ப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
உடனடியாக தாம்பரம் நகராட்சி அதிகாரிகள், சர்வீஸ் சாலையில் தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இது குறித்து தாம்பரம் நகராட்சி கமிஷனர் கிருஷ்ணமூர்த்தியிடம் கேட்டபோது, “கால்வாயில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை ‘ஜெட்ராடு’ எந்திரம் மூலம் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.