குடிநீர் தட்டுப்பாட்டால் தவிக்கும் கிராம மக்கள்

சாணார்பட்டி அருகே, குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.

Update: 2018-08-26 22:00 GMT
கோபால்பட்டி. 


சாணார்பட்டி ஒன்றியம் திம்மணநல்லூர் ஊராட்சி ஜோத்தாம்பட்டியில் சுமார் 2 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். வறட்சியால் இந்த கிராமத்தில் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக குடிநீர் தட்டுப்பாடு நிலவி வந்தது. மேலும் இங்கு அமைக்கப்பட்டிருந்த ஆழ்துளை கிணறுகளும் வறண்டன. இதனால் இங்குள்ளவர்கள் தொலைவில் உள்ள தோட்டங்களுக்கு நடந்து சென்று தண்ணீர் பிடித்து வந்தனர். சிலர் தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

இதையடுத்து குடிநீர் தட்டுப்பாட்டை போக்குவதற்காக புதிய ஆழ்துளை கிணறுகள் அமைத்தும், கடந்த ஒரு மாத காலமாக காவிரி கூட்டுக்குடிநீரை வைத்தும் இந்த கிராமத்தில் உள்ள இரண்டு மேல்நிலைத்தொட்டிகளில் நீரை ஏற்றி குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில் திம்மணநல்லூர் ஊராட்சி நிர்வாகம், தண்ணீர் சிக்கனம் கருதி 15 நாட்களுக்கு முன்பு வீட்டு இணைப்புகளுக்கான தண்ணீர் வினியோகத்தை நிறுத்தினர். இதையடுத்து மேல்நிலைத்தொட்டிக்கு அருகில் 6 பொதுக்குழாய்கள் அமைத்து அதில் கிராம மக்கள் அனைவருக்கும் நான்கு நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்ய தொடங்கியுள்ளனர். இதனால் ஒரே நேரத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் தண்ணீர் பிடிக்க குடங்களுடன் பொதுக்குழாயில் திரள்வதால் தள்ளு முள்ளு ஏற்படுகிறது.

2 ஆயிரம் பேர் வசிக்கும் கிராமத்தில் 6 பொதுக்குழாய்கள் என்பது போதுமானதாக இல்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இதனை தவிர்க்க கிராமத்தின் 3 பகுதிகளில் தனித்தனியாக 6 பொதுக்குழாய்கள் அமைத்து குடிநீர் வினியோகத்தை முறைபடுத்த வேண்டும். அல்லது வாரம் ஒரு முறையாவது வீட்டு இணைப்பில் குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் செய்திகள்