12 நாட்களுக்கு பிறகு வனத்துறையினர் அனுமதி: சுருளி அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
சுருளி அருவியில் 12 நாட்களுக்கு பிறகு வனத்துறையினர் அனுமதித்ததால் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.;

உத்தமபாளையம்,
தேனி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் குறிப்பிட்டு சொல்லக்கூடியதாகவும், புண்ணிய தலமாகவும் சுருளி அருவி சிறப்பு பெற்று விளங்குகிறது. ஹைவேவிஸ் மலைபகுதியில் உள்ள தூவானம் ஏரியில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் சுமார் 9 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதி வழியாக பல்வேறு மூலிகைச்செடிகளில் தவழ்ந்து அருவியாக கொட்டுகிறது.
இதில் குளித்தால் நோய் நீங்கும் என்பது ஐதீகம். இதனால் சுருளி அருவிக்கு தினந்தோறும் தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
ஹைவேவிஸ் மலைப்பகுதி மற்றும் சுருளி வனப்பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வந்ததால் சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அருவிக்கு நடந்து செல்லும் படிகட்டுகளிலும் வெள்ளம் புகுந்தது. இதன் காரணமாக கடந்த 14-ந்தேதி முதல் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்தனர். தொடர்ந்து 12 நாட்களாக நீர்வரத்து அதிகரித்து வந்தது. இதனால் குளிக்க தடை நீடிக்கப்பட்டு வந்தது.
நேற்று அருவியில் நீர்வரத்து குறைய தொடங்கியது. இதையடுத்து சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் அனுமதி அளித்தனர். குளிக்கும் பகுதியில் வெள்ள பெருக்கு ஏற்பட்டதில் ஆண்கள் மற்றும் பெண்கள் குளிக்கும் பகுதியில் இருந்த தடுப்பு கம்பிகள் சேதம் அடைந்துவிட்டது. இதனால் ஆண், பெண் ஒரே இடத்தில் குளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதே போல் குளிக்கும் இடத்தில் பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. எனவே சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக சென்று அருவியில் குளிக்குமாறு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பல இடங்கள் சேதம் அடைந்துள்ளன. மேலும் அருவி நுழைவுப்பகுதியில் குடிநீர் தொட்டிக்கு தண்ணீர் வரும் குழாய் சேதம் அடைந்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகளுக்கு குடிநீர் வசதி இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
அவர்கள் உணவு சமைப்பதற்கு அருவிக்கு சென்று தண்ணீர் எடுத்து வரவேண்டிய நிலை உள்ளது. எனவே அருவியில் சேதமடைந்த தடுப்பு கம்பிகளையும், குடிநீர் வசதியையும் ஏற்படுத்த வனத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.