நள்ளிரவில் பயங்கர விபத்து மோட்டார் சைக்கிள் மீது ஆம்னி பஸ் மோதி 4 பேர் பலி

திருச்சியை அடுத்த விராலிமலை அருகே நள்ளிரவில் மோட்டார் சைக்கிள் மீது ஆம்னி பஸ் மோதியதில் 4 பேர் பலியாகினர்.

Update: 2018-08-26 22:45 GMT
வையம்பட்டி,

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த இரட்டியப்பட்டியை சேர்ந்த 4 பேர் நேற்று நள்ளிரவு விராலிமலை அருகே லஞ்சமேடு என்ற பகுதிக்கு ஒரே மோட்டார் சைக்கிளில் சென்றனர். அங்கு ஒரு ஓட்டலில் அவர்கள் 4 பேரும் சாப்பிட்டு விட்டு, பின்னர் மீண்டும் அதே மோட்டார் சைக்கிளில் திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் லஞ்சமேடு பிரிவு சாலையின் வளைவில் திரும்பினர். அப்போது மதுரையில் இருந்து சென்னை நோக்கி ஆம்னி பஸ் ஒன்று வேகமாக சென்று கொண்டு இருந்தது. அந்த பஸ் திடீரென மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

பஸ் மோதிய வேகத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் 3 பேர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தனர். மேலும் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் படுகாயத்துடன் கிடந்தார். இந்த விபத்தை கண்ட அந்த பகுதியினர் ஓடி வந்து படுகாயத்துடன் கிடந்தவரை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிறிதுநேரத்தில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் விராலிமலை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். இறந்த 4 பேரின் பெயர் விவரம் உடனடியாக தெரியவில்லை. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்