அந்தியூரில் குடிநீர் சீராக வழங்கக்கோரி பொதுமக்கள் சாலைமறியல்

அந்தியூரில், குடிநீர் சீராக வழங்கக்கோரி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

Update: 2018-08-26 22:30 GMT

அந்தியூர்,

அந்தியூர் தவுட்டுப்பாளையம் சத்தியா நகரை சேர்ந்த 100–க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று காலை 10 மணி அளவில் காலிக்குடங்களுடன் அந்தியூரில் உள்ள ரவுன்டானாவுக்கு வந்தனர். பின்னர் பொதுமக்கள் அனைவரும் நடுரோட்டில் அமர்ந்து குடிநீர் வேண்டும் என்று கோ‌ஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் பொதுமக்கள் சாலைமறியலால் அந்த வழியாக வந்த வாகனங்கள் அனைத்தும் ஆங்காங்கே நின்றன.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் அந்தியூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் சாலைமறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது பொதுமக்கள் கூறுகையில், அந்தியூர் மற்றும் தவுட்டுப்பாளையம் பகுதிகளுக்கு பவானி ஆற்றில் இருந்து 8 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. ஆனால் கடந்த 20 நாட்களாக தண்ணீர் வழங்கப்படவில்லை.

இதனால் நாங்கள் அன்றாட தேவைகளுக்கு தண்ணீரின்றி மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். மேலும் இதுகுறித்து அந்தியூர் பேரூராட்சி அலுவலகத்தில் மனு கொடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே சீராக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். அதற்கு போலீசார், பவானி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக குடிநீர் குழாய் மற்றும் மின்மோட்டார்கள் பழுதடைந்துவிட்டது. இதனால் சீராக குடிநீர் கிடைக்கவில்லை. பழுதடைந்து குழாய் மற்றும் மின்மோட்டார்கள் சரிசெய்யும் பணிகள் நடந்து வருகின்றன.

பணிகள் நிறைவடைந்தவுடன் விரைவில் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் தற்காலிகமாக 4 நாட்களுக்கு ஒருமுறை லாரிகள் மூலம் தண்ணீர் வினியோகிக்க பேரூராட்சி அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதனால் சமாதானம் அடைந்த பொதுமக்கள் காலை 11 மணி அளவில் சாலைமறியல் போராட்டத்தை கைவிட்டுவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

அந்தியூர் ரவுன்டானாவில் நடந்த சாலைமறியலால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்