பழுதான டயரை மாற்ற முயன்ற போது ஆம்னி பஸ்சுக்கு அடியில் சிக்கி கிளனர் சாவு

ஆரல்வாய்மொழி அருகே பழுதான டயரை மாற்ற முயன்ற போது ஜாக்கிகள் சரிந்து விழுந்ததால் ஆம்னி பஸ்சுக்கு அடியில் சிக்கி கிளனர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2018-08-26 22:45 GMT
ஆரல்வாய்மொழி,

மதுரை மாவட்டம் கீழவளவு அம்மன் கோவில்பட்டியை சேர்ந்தவர் வாழமலை (வயது 52). இவர் நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு செல்லும் ஒரு தனியார் ஆம்னி பஸ்சில் கிளனராக பணியாற்றி வந்தார். இதற்காக அவர் நாகர்கோவிலில் தங்கியிருந்தார். விடுமுறை நாட்கள் மட்டும் வீட்டுக்கு செல்வது வழக்கம்.

நேற்று முன்தினம் மாலை பஸ்சில் ஏற்பட்ட பழுதுகளை சரி செய்வதற்காக ஆரல்வாய்மொழி அருகே முத்துநகர் பகுதியில் உள்ள ஒர்க்‌ஷாப்புக்கு ஓட்டி சென்றனர். அங்கு பஸ்சில் பழுதான டயரை கழற்றி மாற்றும் பணி நடந்தது. இதற்காக வாழமலை பஸ்சை ஜாக்கிகளால் உயர்த்தி அதன் அடியில் படுத்த நிலையில் டயரை கழற்றி மாற்ற முயன்றார்.

அப்போது, எதிர்பாராதவிதமாக ஜாக்கிகள் சரிந்து விழுந்தது. இதனால் பஸ்சுக்குள் அடியில் படுத்திருந்த வாழமலை உடல் நசுங்கினார். இதை பார்த்த டிரைவரும், சக தொழிலாளர்களும் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் வாழமலையை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி வாழமலை பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இறந்த வாழமலைக்கு செல்வி என்ற மனைவியும், 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். 

மேலும் செய்திகள்