சிகிச்சைக்கு வைத்திருந்த பணத்தை வெள்ள நிவாரணத்திற்கு வழங்கிய மாணவிக்கு உதவி செய்ய போட்டிப்போடும் மருத்துவமனைகள்

இதய அறுவை சிகிச்சைக்கு வைத்திருந்த பணத்தை கேரள வெள்ள நிவாரணத்திற்கு வழங்கிய மாணவிக்கு அறுவை சிகிச்சை செய்ய மருத்துவமனைகள் போட்டிப்போட்டு முன்வந்துள்ளன.

Update: 2018-08-26 22:45 GMT
வெள்ளியணை,

வெள்ளியணை அருகே உள்ள குமாரபாளையத்தை சேர்ந்த சுப்பிரமணி-ஜோதிமணி தம்பதியின் மகள் அட்சயா(வயது 12). இவர் அங்குள்ள அரசு பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வருகிறார். தந்தை சுப்பிரமணி இறந்துவிட்ட நிலையில் தாய் ஜோதிமணி அட்சயாவை வளர்த்து வருகிறார். பிறவியிலேயே இதய கோளாறால் பாதிக்கப்பட்ட அட்சயாவுக்கு இரண்டு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இதற்காக அதிக அளவில் பணம் தேவைப்பட்டது. இதனால் கவலையில் இருந்த ஜோதிமணிக்கு கரூரில் உள்ள இணைந்த கரங்கள் என்ற அமைப்பின் முயற்சியால் சமூக வலைதளங்கள் மூலம் நிதி திரட்டி சென்னையில் முதல் அறுவை சிகிச்சை முடிந்தது. 2-வது அறுவை சிகிச்சைக்கு நிதி திரட்டும் முயற்சியின் மூலம் ரூ.20 ஆயிரம் நிதி திரண்டது. இந்த நிலையில் அண்மையில் பெய்த கன மழையால் கேரளாவில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்பட்டனர். இதனை அறிந்த பலரும் கேரளாவிற்கு நிதி உதவி அளித்து வருவதை செய்திகளின் மூலம் அறிந்த அட்சயா தனது இதய அறுவை சிகிச்சைக்காக திரட்டி வைத்திருந்த நிதியில் இருந்து ரூ.5 ஆயிரத்தை கேரள வெள்ள நிவாரணத்திற்கு அளித்தார். இந்த சிறுமியின் மனிதநேய செயல் அனைவராலும் பாராட்டப்பட்டது.

இந்த நிலையில் இதய நோய்க்கு சிறப்பு சிகிச்சை அளிக்கக்கூடிய புகழ்பெற்ற தனியார் மருத்துவமனை நிர்வாகங்களான கர்நாடக மாநிலம் பெங்களூரு சத்யநாராயண, மகாராஷ்டிர மாநிலம் மும்பை ஹார்ட் டூ ஹார்ட், ஆந்திர மாநிலம் புட்டபர்த்தி சாய் பாபா மற்றும் கேரள மாநிலம் உள்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் அட்சயாவுக்கு கட்டணமின்றி அறுவை சிகிச்சை செய்ய அழைப்புகள் வந்த வண்ணம் உள்ளன. இதேபோல் அட்சயாவின் வங்கி கணக்கில் பலரும் நிதி உதவி அளித்துள்ளனர். அந்த தொகை இதுவரை ரூ.1 லட்சத்து 40 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

அட்சயாவிற்கு அறுவை சிகிச்சை செய்வதற்கு முன்னின்று உதவிகள் செய்து வரும் இணைந்த கைகள் அமைப்பினர் தற்போது சென்னை அப்போலோ மருத்துவமனையில் 2-வது அறுவை சிகிச்சைக்கான முன்னேற்பாடுகளை செய்து வருகின்றனர். இன்னும் 15 நாட்களுக்குள் அட்சயாவுக்கு அறுவை சிகிச்சை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே அட்சயா வழங்கிய ரூ.5 ஆயிரம், மேலும் பல்வேறு தரப்பினரிடம் இருந்து திரட்டப்பட்ட ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை மக்கள் பாதை, இணைந்த கைகள் அமைப்பினர் இணைந்து கேரள மாநிலம் மூணாறு எம்.எல்.ஏ. ராஜேந்திரனிடம் நேரில் சென்று கொடுத்தனர். அட்சயாவின் நிதி உதவிக்கு பாராட்டும், நன்றியும் தெரிவித்த அவரும் அப்பகுதி மக்களும் அட்சயாவுக்காக பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்