பா.ஜனதா, தி.மு.க. கூட்டணி உருவாகுமா? மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

பா.ஜனதா, தி.மு.க. கூட்டணி உருவாகுமா? என்பது குறித்து எதுவும் சொல்ல முடியாது என கன்னியாகுமரியில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

Update: 2018-08-26 23:15 GMT
கன்னியாகுமரி,

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அஸ்தி நேற்று கன்னியாகுமரி கடலில் கரைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் 2004-ம் ஆண்டு பதவியில் இருந்த போது கன்னியாகுமரியையும், காஷ்மீரையும் இணைக்கும் வகையில் தங்க நாற்கர சாலை திட்டத்தை கன்னியாகுமரியில் தொடங்கி வைத்தார். அவர் அடிக்கல் நாட்டிய இடத்தில் அவரது அஸ்தி வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. அந்த இடத்தில் வாஜ்பாய்க்கு நினைவு மண்டபமோ, சிலையோ அமைப்பதன் மூலம் அவருடைய நினைவை போற்றி உரிய மரியாதை செலுத்தலாம்.

புண்ணிய தலங்களான கங்கை, ராமேசுவரம், கன்னியாகுமரி போன்ற இடங்களில் காலம், காலமாக தலைவர்களின் அஸ்தி கரைக்கப்பட்டு வருகிறது. அதன்படி, கன்னியாகுமரியில் வாஜ்பாய் அஸ்தி கரைக்கப்பட்டது. இதுபோல், தமிழகத்தில் மேலும் 6 இடங்களில் வாஜ்பாய் அஸ்தி கரைக்கப்பட்டது.

கருணாநிதி நினைவேந்தல் கூட்டத்தில் பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா பங்கேற்பதாக எனக்கு எந்த தகவலும் தெரியவில்லை. சில அரசியல் கட்சிகள் எரிகிற வீட்டில் கிடைத்தது லாபம் என பிடுங்குவது போல் இதனை பெரிதாக்கி அரசியல் ஆதாயம் தேட பார்க்கிறார்கள். பா.ஜனதா, தி.மு.க. கூட்டணி உருவாகுமா? என்பது குறித்து இப்போது எதுவும் சொல்ல முடியாது.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்