திருப்பூரில் 2–ம் வகுப்பு மாணவிக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி: கொசுமருந்து தெளிக்கும் பணி தீவிரம்

திருப்பூரில் 2–ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மாநகராட்சி பகுதியில் கொசுமருந்து தெளிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

Update: 2018-08-26 23:00 GMT

நல்லூர்,

திருப்பூர் மாநகராட்சி பகுதியில் ஆங்காங்கே குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கிறது. சாக்கடை துர்வாரப்படாததாலும், பிளாஸ்டிக் பைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை சாக்கடையில் கொட்டியதாலும், சாக்கடை கால்வாயில் கழிவு நீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் கொசு உற்பத்தியாகி, நகரெங்கும் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. அது மட்டுமல்லாமல் தேங்கி கிடக்கும் குப்பைகளாலும், சாக்கடை நீராலும் துர்நாற்றம் வீசுகிறது.

இந்த சுகாதார சீர்கேட்டின் காரணமாக திருப்பூர் வீரபாண்டியை அடுத்த ஜெ.ஜெ.நகர் பகுதியில் 2–ம் வகுப்பு படிக்கும் 7 வயது மாணவிக்கு அடிக்கடி காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மாணவியின் பெற்றோர் அவளை அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். ஆனாலும் காய்ச்சல் குணமாகாமல் விட்டு விட்டு வந்தது. இதையடுத்து மாணவியின் ரத்த மாதிரியை எடுத்து பரிசோதனைக்கு டாக்டர்கள் அனுப்பினார்கள். பரிசோதனையின் முடிவில் மாணவிக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த மாணவி திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து நோய் பூரணமானதை தொடர்ந்து அந்த மாணவி வீடு திரும்பினார்.

இதையடுத்து டெங்கு காய்ச்சல் மேலும் பரவாமல் தடுக்க மாநகராட்சி அதிகாரிகள் சுகாதார பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்கள். குறிப்பாக அபேட் மருந்து தெளித்தல், வீடுகளில் கொசுவை ஒழிக்கும் மருந்து தெளிக்கப்பட்டது. மேலும் தேங்கி கிடக்கும் குப்பைகள் அள்ளப்பட்டு குப்பை கிடங்கிற்கு கொண்டு செல்லப்படுகிறது. மாநகராட்சி பள்ளிகளில் மாணவ–மாணவிகளுக்கு நிலவேம்பு கஷாயம் கொடுக்கப்பட்டது.

மேலும் செய்திகள்