தமிழகத்தில் மதுக்கடைகள் படிப்படியாக மூடப்படுவது உறுதி அமைச்சர் தங்கமணி பேட்டி

தமிழகத்தில் மதுக்கடைகள் படிப்படியாக மூடப்படுவது உறுதி, என அமைச்சர் தங்கமணி கூறினார்.

Update: 2018-08-26 23:00 GMT
நாமக்கல்,

தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி நேற்று நாமக்கல்லில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த 2014-ம் ஆண்டு தமிழகத்தில் சுமார் 6,800 மதுக்கடைகள் இருந்தன. மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா பதவி ஏற்ற போதும், தற்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி ஏற்றபோதும் தலா 500 மதுக்கடைகளை மூடினர்.

அதன் பிறகு படிப்படியாக மேலும் 1,000 மதுக்கடைகள் மூடப்பட்டன. தற்போது 4,800 மதுக்கடைகள் மட்டுமே உள்ளன. பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி படிப்படியாக மதுக்கடைகளை மூடுவதில் உறுதியாக இருக்கிறோம். இதில் மாறுபட்ட கருத்து இல்லை.

மதுக்கடைகளின் எண்ணிக்கை குறைந்து இருப்பதால், அவற்றில் பணிபுரிந்த பணியாளர்களுக்கு வேறு துறையில் பணியிடங்களை ஒதுக்கி கொடுக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. வேறு துறைக்கு செல்லும் டாஸ்மாக் பணியாளர்கள் தங்களுக்கு இதே முன்னுரிமை வழங்க வேண்டும் என கேட்டு வருகின்றனர். ஆனால் இதர துறைகளில் உள்ளவர்கள் அதற்கு ஆட்சேபனை தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

இருப்பினும் கல்வித்தகுதி அடிப்படையில் எழுத்துத்தேர்வு நடத்தி இளநிலை உதவியாளர் நிலையிலான பணியிடம் வழங்க முடிவு செய்து உள்ளோம். அதற்கான எழுத்துத்தேர்வு அடுத்த மாதம் (செப்டம்பர்) நடக்கிறது.

சூரிய மின்நிலையங்களை பொறுத்தவரையில் மின்சார வாரியம் தொடர்பான அலுவலகங்களில் படிப்படியாக நிறுவப்பட்டு வருகிறது. அனைத்து அரசு அலுவலகங்களிலும் சூரிய மின்நிலையம் அமைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். கணினி மயமாக்கப்பட்ட தானியங்கி மின்தடை பழுதுநீக்கும் மையம் நாமக்கல்லை தொடர்ந்து படிப்படியாக ஒவ்வொரு மாவட்டத்திலும் தொடங்கப்படும். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால், அதற்கு பணியாற்ற வசதியாக மூத்த அமைச்சர்கள் பதவி விலக வேண்டும் என துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கருத்து தெரிவித்து உள்ளார். அந்த விவகாரத்தில் கட்சியின் தலைமை எடுக்கும் முடிவுக்கு அனைவரும் கட்டுப்படுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்