நாட்டு வெடி வெடித்து நாய் சாவு போலீசார் விசாரணை

பேரளம் அருகே நாட்டு வெடி வெடித்து நாய் இறந்தது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2018-08-26 22:15 GMT
நன்னிலம்,

திருவாரூர் மாவட்டம், பேரளம் அருகே உள்ள திருமீயச்சூர் கட்டளை தெருவை சேர்ந்தவர் நிரேந்திரன். இவருடைய வீட்டின் பின்புறத்தில் உள்ள வயலில் நேற்று காலை திடீரென வெடி வெடித்த சத்தம் கேட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அங்கு சென்று பார்த்துள்ளார். அப்போது அங்கு ஒரு நாய் வாய் சிதறிய நிலையில் இறந்து கிடந்துள்ளது.

இதுகுறித்து பேரளம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். நரிக்குறவர்கள் நரி மற்றும் காட்டு பூனைகளை பிடிக்க நாட்டு வெடியில் பன்றி கொழுப்பு தடவி பயன்படுத்துவார்கள். அந்த வெடியை நாய் கவ்வி வந்து கடித்தபோது வெடித்து இருக்கலாம் என கூறப்படுகிறது.

இதை தொடர்ந்து நாயின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்கு பேரளம் கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. இதுகுறித்து திருமீயச்சூர் கிராம நிர்வாக அலுவலர் புஷ்பநாதன் பேரளம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்