சென்னையில் நடைபெறும் கருணாநிதி புகழஞ்சலி நிகழ்ச்சியில் அமித்ஷா பங்கேற்பா?
சென்னையில் நடைபெறும் கருணாநிதி புகழஞ்சலி நிகழ்ச்சியில் அமிர்ஷா பங்கேற்கிறாரா? என்பதற்கு தமிழிசை சவுந்தரராஜன் பதில் அளித்துள்ளார்.
தூத்துக்குடி,
நெல்லையில் நடந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி புகழுக்கு வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பாரதீய ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி தமிழகத்தில் 7 இடங்களில் கரைக்கப்பட்டு உள்ளது. இதை பெரிய பாக்கியமாகவே நாங்கள் கருதுகிறோம். நாங்கள் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் புகழஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்கிறோம். அதேபோன்று வருகிற 28-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு புகழஞ்சலி கூட்டம் சென்னையில் நடக்கிறது. அதிலும் அனைத்துக்கட்சி தலைவர்களும் கலந்து கொள்கிறார்கள். தமிழகத்தில் இத்தகைய அரசியல் நாகரிகம் பெருகி வருவது ஆறுதலை தருகிறது. எவ்வளவுதான் கொள்கை வேறுபாடுகள் இருந்தாலும், சமதளத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் ஒன்றிணைந்து வருவது வருங்காலத்தில் ஆரோக்கியமான அரசியலை முன்னெடுத்து செல்லும்.
சென்னையில் நடைபெறும் கருணாநிதி புகழஞ்சலி நிகழ்ச்சியிலும் எங்கள் கட்சியின் பிரதிநிதி யாராவது கலந்து கொள்வார்கள். கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா வருகை குறித்த பயணத்திட்டம் எதுவும் இதுவரை எனக்கு வரவில்லை. அந்த நிகழ்ச்சியில் எங்கள் தேசிய தலைவர் அமித்ஷா கலந்து கொள்ளவில்லையெனில், அவருக்கு பதிலாக யாராவது முக்கிய தலைவர் கலந்து கொள்வார். அமித்ஷா வந்தால், அதிகாரப்பூர்வமாக மத்திய பா.ஜனதா அலுவலகத்தில் இருந்து தகவல் வரும். டுவிட்டர் மூலமாகவும், யூகங்கள் அடிப்படையிலும் தலைவர்களின் வருகையை பதிவு செய்ய முடியாது. சமதளத்தில் தலைவர்கள் வருவதை ஆரோக்கியமான அரசியலாகத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.