அ.தி.மு.க.வுக்கு சவால் விடும் எதிர்க்கட்சியினர் இடைத்தேர்தலில் டெபாசிட் இழப்பார்கள் - ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. பேச்சு

அ.தி.மு.க.வுக்கு சவால்விடும் எதிர்க்கட்சியினர் இடைத்தேர்தலில் டெபாசிட் இழப்பார்கள் என்று ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. பேசினார்.;

Update: 2018-08-26 23:30 GMT

மதுரை,

திருப்பரங்குன்றம் தொகுதியில் உள்ள சிலைமான், எஸ்.புளியங்குளம், விரகனூர், ஆகிய பகுதிகளில் முதல்–அமைச்சர், துணை முதல்–அமைச்சர் உத்தரவின்படி பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மதுரை புறநகர் மாவட்ட கழக அவைத்தலைவர் எஸ்.என்.ராஜேந்திரன், பொருளாளர் எஸ்.அம்பலம், எம்.ஜி.ஆர்.இளைஞரணி செயலாளர் வக்கீல் ரமேஷ், பொதுக்குழு உறுப்பினர் முத்துக்குமார் ஆகியோர் தலைமை தாங்கினர். மதுரை புறநகர் மாவட்ட கழக செயலாளர் ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கி பேசியதாவது:–

திருப்பரங்குன்றம் தொகுதியில் அ.தி.மு.க.வுக்கு என்று ஒரு தனி வரலாறு உள்ளது. 1973–ல் புரட்சித்தலைவர் முதன்முதலில் கட்சிக்கூட்டத்தை மதுரை மாநகரில் நடத்த முடிவுசெய்யப்பட்ட போது அப்போதிருந்த தி.மு.க.வினர் அதற்கு அனுமதி தர மறுத்த போது முதன் முதலாக அந்த கூட்டத்தினை திருப்பரங்குன்றத்தில் நடத்தி தமிழக அரசியலில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தினார். அ.தி.மு.க.வின் கோட்டையாக விளங்கும் திருப்பரங்குன்றத்தில் 1957 முதல் 2016 வரை 14முறை சட்டமன்ற தேர்தலும் 2017–ல் இடைத்தேர்தலும் நடைபெற்றது. இதில் அ.தி.மு.க. 9முறை வெற்றிபெற்று உள்ளது. காங்கிரஸ் 2 முறையும், தி.மு.க. 4 முறையும் வென்றுள்ளது.

திருப்பரங்குன்றம் தொகுதி மக்கள் புரட்சித்தலைவர் மீதும், புரட்சித்தலைவி மீதும் அதிக பற்றும்பாசமும் வைத்துள்ளனர். இதனை எண்ணிப்பார்க்காமல் வெற்றி பெற்று விடுவோம் என்று ஊடகங்கள் வாயிலாக அ.தி.மு.க.வுக்கு சவால் விடும் தி.மு.க.வும், டி.டி.வி. தினகரனும், எதிர்க்கட்சியினயிரும் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் டெபாசிட் இழப்பார்கள்.

ஆர்.கே.நகருக்கே செல்ல முடியாமல் வார்த்தை ஜாலமிடும் டி.டி.வி.தினகரன் திருப்பரங்குன்றம் தொகுதியில் வெற்றி பெறுவோம் என்று கூறுவது வேடிக்கையாக உள்ளது. இவர் எந்த சாதனையை சொல்லி மக்களிடத்தில் வாக்கு கேட்பார். ஒரு சாதனையும் செய்யாத எதிர்க்கட்சிகள் எல்லாம் வெற்றி பெறுவோம் என்று கூறி வருவது ஒரு மாயை ஆகும். மக்களும் இதை ஒரு போதும் நம்பமாட்டார்கள்.

பூத் கமிட்டி நிர்வாகிகள் மக்களிடத்தில் அம்மா அரசின் சாதனைகளை எடுத்துரைக்க வேண்டும்.ஏற்கனவே 43,000 வாக்கு வித்தியாசத்தில் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ளோம். நடைபெற உள்ள இடைத்தேர்தலில் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க. வெற்றிபெற கட்சி நிர்வாகிகள் அனைவரும் அயராது பாடுபடவேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்