முன்னாள் மனைவியோடு புதிய வாழ்க்கை

‘விவாகரத்துகள் அதிகமாகிக்கொண்டே இருக்கிறதே?’ என்று ஒட்டுமொத்த சமூகமும் கவலைப்பட்டுக்கொண் டிருக்கும் இந்த நேரத்தில், வித்தியாசமான வாழ்வியல் சிந்தனை தலைதூக்க தொடங்கி இருக்கிறது.

Update: 2018-08-26 10:38 GMT
‘விவாகரத்துகள் அதிகமாகிக்கொண்டே இருக்கிறதே?’ என்று ஒட்டுமொத்த சமூகமும் கவலைப்பட்டுக்கொண் டிருக்கும் இந்த நேரத்தில், வித்தியாசமான வாழ்வியல் சிந்தனை தலைதூக்க தொடங்கி இருக்கிறது. விவாகரத்து செய்த தம்பதிகள் தங்கள் வாழ்க்கையை புதுப்பிக்கும் முனைப்போடு புதிய கலாசாரத்தை நோக்கி அடியெடுத்து வைக்க தொடங்கி இருக்கிறார்கள். இந்த கலாசார மாற்றத்தை பெண்கள் அதிக அளவில் முன்னெடுத்துச் செல்வதால், சமூகத்தில் அது மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கும் என்ற புதிய நம்பிக்கை உருவாகியிருக்கிறது. ஒன்றாக வாழ்ந்து, பின்பு முறைப்படி பிரிந்து பல ஆண்டுகளாக தனித்து வாழும் ஆண்களும், பெண்களும் வாழ்க்கையில் ஏராளமான அனுபவங்களை பெற்றுவிட்ட பின்பு, மீண்டும் கணவன்-மனைவியாக இணைந்து வாழ விரும்புகிறார்கள். இப்படி மீண்டும் சேர்ந்து வாழ விரும்பும் பழைய ஜோடிகளின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்துக்கொண்டிருக்கிறது.

உதாரணத்திற்கு இரண்டு ஜோடிகளின் பிரிவு, அவர்களுக்குள் ஏற்படுத்திய மன மாற்றங்களை பார்ப்போம். திருமணம் செய்து கொண்டு இல்லற வாழ்க்கையை இனிமையுடன் கழித்து கொண்டிருந்த முதல் ஜோடி மனக்கசப்பால் பிரிந்துவிட்டது. மூன்றே ஆண்டுகளில் அவர்களின் வாழ்வியல் பந்தம் முடிவுக்கு வந்துவிட்டது. அப்போது அவர்களுக்கு ஒரு வயதில் மகள் இருந்தாள். கணவர் கைநிறைய சம்பாதித்துக்கொண்டிருந்தவர். ஆனால் சேமிக்கும் பழக்கம் இல்லாதவர். மனைவி அவரோடு மகிழ்ச்சியாகத்தான் வாழ்ந்துகொண்டிருந்தாள். கண்டபடி செலவு செய்வதும், ஜாலியாக ஊர் சுற்றுவதும் கணவருக்கு பிடித்தமான பொழுதுபோக்காக இருந்தது. அவரது செலவுகளை குறைக்கவும், ஊர்சுற்றுவதை கட்டுப்படுத்தவும் மனைவி திட்டமிட்டாள். ஆனால் அவளால் முடியவில்லை. இந்த நிலையில் கணவர் இன்னொரு பெண்ணுடன் பேசிக்கொண்டிருந்த தகவல் அவளுக்கு கிடைத்தது. அந்த பெண்ணை பற்றி கணவரிடம் விசாரித்தாள். அவள் தனது முன்னாள் காதலி என்பதையும், தற்போது அவளுக்கும்-தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்ற உண்மையையும் கணவர் விளக்கி இருக்கிறார். இருவரும் எதேச்சையாக சந்தித்து பேசிய விவரத்தையும் கூறி இருக்கிறார். ஆனால் அவளோ கணவர் சொன்னதை நம்பவில்லை.

‘முன்னாள் காதலியோடு தற்போதும் தொடர்பில் இருக்கிறார், அவளுக்காகத்தான் கண்டபடி பணத்தை செலவு செய்கிறார், அவளோடுதான் அடிக்கடி ஊர்சுற்றப் போகிறார்’ என்ற முடிவுக்கு மனைவி வந்துவிட்டாள். அது அவர்களுக்குள் மனக்கசப்பை ஏற் படுத்தியது. அதன் காரணமாக ஏற்பட்ட வாக்குவாதம், சண்டை, சச்சரவுகள் இருவருக்குமிடையே பிரிவையும், பிளவையும் உருவாக்கியது. விவாகரத்தும் செய்துகொண்டார்கள். இருவரும் பிரியும்போது ஒரு வயதாக இருந்த மகள் இப்போது எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கிறாள்.

12 வருட தனிமை வாழ்க்கை இருவருக்கும் ஏராளமான பாடங்களை கற்றுக்கொடுத்திருக்கிறது. சமூகம், சக மனிதர்கள், உற வினர், நண்பர்கள் என்று பலரும் பலவிதங்களில் அவளுக்கு கசப்பான அனுபவங்களை கொடுத்தார்கள். முகமூடி அணிந்துகொண்டு உறவாடிய பல மனிதர்களின் நிஜமுகங்களை பார்த்தாள். வாழ்க்கையில் அவள் எடுத்த சில தவறான முடிவுகளால் அடுத்தடுத்து பாதிக்கப்பட்டாள். மனகஷ்டங்கள் ஏற்படும்போதெல்லாம் தான் நிராயுத பாணியாக நிற்பதுபோல உணர்ந்தாள். யாருக்காக வாழ்கிறோம்? எதற்காக வாழ்கிறோம்? என்ற கேள்விகள் அவளுக்குள் எழுந்தன. கிட்டத்தட்ட இதுபோன்ற கஷ்டங்கள், பிரச்சினைகள், கவலைகள் அவளை பிரிந்திருந்த கணவருக்கும் ஏற்பட்டிருந்தன.

‘கணவரை தேவையில்லாமல் சந்தேகப்பட்டுவிட்டோமோ?’ என்ற எண்ணத்தில் அவள், கவுன்சலிங்குக்கு வந்தாள். தன் கணவரை விட மோசமான மனிதர்கள் சிலரை தனது வாழ்க்கையில் சந்தித்த அனுபவங்களை சொன்னாள். ‘அவர்களோடு ஒப்பிடும்போது என் கணவர் நல்லவர்’ என்றாள். அவளது முன்னாள் கணவரின் தற்போதைய மனநிலையை அறிந்துகொள்ள வேண்டியதிருந்தது. மகளை பார்க்க வேண்டும் என்று ஏங்கிக்கொண்டிருந்த அவரை அழைத்ததும், வந்தார். இருவரும் ஆன்மிக நம்பிக்கை கொண்டவர்கள். பிடித்தமான கோவிலுக்கு சென்று மனம்விட்டுப் பேசுங்கள் என்று அனுப்பிவைத்ததற்கு நல்ல பலன் கிடைத்தது. இரண்டு மூன்று மாதங்கள் இருவரும் சந்தித்து பேசினார்கள். அந்த சந்திப்பு அவர் களுடைய எதிர்கால வாழ்க்கையை சிந்திக்க வைத்தது. இருவருக்குமிடையே இருந்த சின்னச்சின்ன பிரச்சினைகள் பேசி சரிசெய்யப்பட்டு, மீண்டும் இணைந்து வாழ்கிறார்கள். மகளும் மிகுந்த மகிழ்ச்சியாகிவிட்டாள்.

இன்னொரு ஜோடி ஈகோ பிரச்சினையால் பிரிவை எதிர்கொண்டது. ‘மனைவி அழகாக இருப்பதாலும், அதிகம் சம்பாதிப்பதாலும் தன்னை மட்டம்தட்டுகிறாள்’ என்று கூறி கணவர் பிரிந்து போய் விட்டார். நான்கு ஆண்டுகள் தனிமையில் வாழ்ந்தவர் மனைவியுடனான பந்தத்தை புதுப்பிக்க விரும்பினார். ‘நான், விவாகரத்தான என் மனைவியோடு மீண்டும் இணைந்து வாழ விரும்புகிறேன். உறவினர் மூலம் அவளுக்கு தூது அனுப்பினேன். அவளும் என்னை சந்திக்க சம்மதித்திருக்கிறாள். ஆனால் அவளிடம் எதை பேசுவது? எப்படி பேசுவது? என்று தெரியவில்லை. எங்களுக்குள் நடந்த பழைய கசப்பான அனுபவங்களை அவள் மீண்டும் கிளப்பினால் நான் என்ன பதில் சொல்லவேண்டும்?’ என்று ஆலோசனை கேட்டார்.

அவருக்கு கவுன்சலிங் வழங்கிவிட்டு, ‘மீண்டும் பழைய உறவை துளிர்க்கச்செய்யவேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு எப்படி வந்தது?’ என்று கேட்டேன். அதற்கு அவர், பிரபல இந்தி நடிகர் ஒருவரின் பேட்டிக் கட்டுரை வெளியான நாளிதழை எடுத்து என்னிடம் நீட்டினார். ‘இந்த நடிகர், விவாகரத்தான தனது மனைவியோடு மீண்டும் நட்பு வைத்திருக்கிறார். குழந்தைகளோடு அவர்கள் இருவரும் சேர்ந்து கடற்கரையில் பொழுதுபோக்குகிறார்கள். அந்த நடிகரைப்போல் எனக்கும் மனப்பக்குவம் வருமா? என்று யோசித்தபோதுதான் மீண்டும் முன்னாள் மனைவியோடு சேர்ந்து வாழவேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது’ என்றார். அவரும் சில மாதங்களிலே மனைவியோடு சேர்ந்து புதிய வாழ்க்கை வாழத்தொடங்கிவிட்டார். இப்படிப்பட்ட சிந்தனைத் தெளிவு சமூகத்தில் பலரிடம் ஏற்பட்டிருக்கிறது. கடந்த கால வாழ்க்கையை புதுப்பிக்கவும் வழிவகை செய்திருக்கிறது.

விவாகரத்து செய்யவிரும்புகிறவர்களும், விவாகரத்து செய்து கொண்டவர்களும் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

* விவாகரத்து செய்துதான் ஆகவேண்டும் என்ற முடிவுக்கு நீங்கள் வந்தாலும், சக மனிதர்களிடம் நடப்பதுபோல் உங்கள் துணை யிடமும் மதிப்பாக நடந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். கோபம், குரோதத்தால் கண்டபடி பேசிவிட வேண்டாம். அவதூறுகளையும் பரப்பவேண்டாம். உங்கள் கண்முன்னே துணை அழிந்துபோய்விட வேண்டும் என்று கருதாமல், பெருந்தன்மையையுடன் நடந்து கொள்வதற்கு முடிந்த அளவு முயற்சி செய்யுங்கள். முடியாவிட்டால் அமைதியாக இருங்கள்.

* துணையை பிடிக்காவிட்டால், அவரது ஒட்டுமொத்த குடும்பத்தையும் இகழ்ந்து பேசாதீர்கள். உங்களுக்கு பிடிக்காத இணையாக இருந்தாலும் அவரது குடும்பத்தோடு இருக்கும் தொடர்புகளை எல்லாம் அறுத்தெறிந்துவிட வேண்டாம்.

* விவாகரத்து செய்வதற்கு முன்பு கோப தாபங்களை ஒதுக்கிவைத்துவிட்டு, ஒருசில முறை தனியாக அமர்ந்து இருவரும் மனம்விட்டு பேச முயற்சி செய்யுங்கள். அப்படி பேசினாலும் சேர்ந்து வாழ வாய்ப்பில்லை என்று கருதினாலும், மென்மையாக உங்கள் தரப்பு கருத்துகளை அழுத்தம் திருத்தமாக எடுத்துவைக்க அந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள். அது நிச்சயம் என்றாவது ஒருநாள் பலன் தரும்.

* சந்தர்ப்ப சூழ்நிலைகளால் என்ன தவறு நடந்திருந்தாலும் ‘நடத்தை கெட்டவள்’ என்று பெண்ணையோ, ‘நம்பிக்கைத் துரோகி’ என்று ஆணையோ பேசவேண்டாம். திட்டமிட்டு கேவலமான தகவலை பரப்பிக்கொண்டிருக்கவும் வேண்டாம்.

* மூன்றாம் நபர்களிடம் பேசும்போது, ‘ஏதோ எங்களுக்கு பிடிக்கவில்லை. அதனால் பிரிந்து வாழலாம் என்று நினைக்கிறோம்’ என்று மட்டும் சொல்லுங்கள். துணையை பற்றி குறை சொல்லி உங்களை நியாயப்படுத்த முயற்சிக்காதீர்கள்.

* விவாகரத்து செய்தே ஆகவேண்டும் என்ற நிலை ஏற்பட்டாலும், உடனே அதை நிறைவேற்றாமல் 6 மாதங்கள் தனித்தனியாக பிரிந்து வாழுங்கள். ஒருவரை ஒருவர் குறை சொல்லாமல் தனியாக வாழ்ந்து பாருங்கள். அந்த தனிமை வாழ்க்கை கூட உங்களுக்கு நல்ல பாடங்களை கற்றுத் தரலாம். மாற்றத்தை ஏற்படுத்தவும் செய்யலாம்.

* விவாகரத்து செய்த தம்பதிகள் ‘காலம் முழுக்க இனி நீதான் எனக்கு முதல் எதிரி’, என்பதுபோல் கங்கணம்கட்டிக்கொண்டு, விரோதத்தையும், வன்மத்தையும் வளர்க்காதீர்கள். ‘பிரிந்துவிட்டோம். அதோடு நமக்குள் இருந்த பிரச்சினை முடிந்துவிட்டது’ என்று அமைதி காத்திடுங்கள். அவரவர் வேலையில் கவனத்தை செலுத்துங்கள்.

* குழந்தைகள் இருந்தால், தந்தையை பற்றி தாயோ- தாயை பற்றி தந்தையோ குந்தைகளிடம் தரக்குறைவாக பேசவேண்டாம். நல்ல விஷயங்கள் இருந்தால் மட்டும் பேசுங்கள் அல்லது அமைதி காத்திடுங்கள். மன அமைதிக்கு தியானம், மியூசிக் தெரபி போன்றவைகளில் ஈடுபடுங்கள்.

* மாற்றங்கள் ஒன்றே மாறாதது என்பதை உணருங்கள். உங்கள் வாழ்க்கையில் மீண்டும் மாற்றங்கள் ஏற்படலாம். மீண்டும் கணவன்-மனைவி என்ற உறவை புதுப்பிக்கும் கட்டாயத்தை காலம் உருவாக்கும் என்பதை உணர்ந்து, மிக மோசமான தருணங்களில்கூட நிதானமாக நடந்துகொள்ளுங்கள். அவரவர் சுயமரியாதைக்கு பங்கம் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

-விஜயலட்சுமி பந்தையன்

மேலும் செய்திகள்