பெண்களுக்கான பெட்ரோல் மையம்
வாகனம் ஓட்டும் பெண்களுக்காக பிரத்யேக பெட்ரோல் பங்க் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
வாகனம் ஓட்டும் பெண்களுக்காக பிரத்யேக பெட்ரோல் பங்க் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அங்கு வாகனங்களில் பெட்ரோல் நிரப்ப வரும் பெண்களை கவரும் வகையில் அழகிய சித்திரங்கள் தீட்டப்பட்டுள்ளன. அவை பெண் ஆளுமையை போற்றும் வகையில் சித்தரிக்கப்பட்டுள்ளன. மற்ற பெட்ரோல் பங்குகளில் இருந்து தனித்துவமாக தெரியும் வகையில் இளஞ்சிவப்பு நிறத்தின் பின்னணியில் பெண்களின் சித்திரங்கள் அலங்கரித்து கொண்டிருக்கின்றன.
பெண்களுக்கு தனியாக பெட்ரோல் பங்க் அமைத்திருப்பதற்கான காரணத்தை குறிப்பிடும் வகையில், ‘ஏனெனில் நீங்கள் சிறப்பானவர்கள்’ என்ற வாசகங்களை தாங்கியபடி ஒரு பெண்ணின் புகைப்படம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இங்கு பெண்களே அதிகமாக பணியமர்த்தப்பட்டுள்ளார்கள். இந்த பெட்ரோல் பங்க் கர் நாடக மாநிலம் மங்களூரு அருகே உள்ள வாலேன்சியா பகுதியில் அமைந்திருக்கிறது.
இதுபற்றி பெட்ரோல் பங்க் மானேஜர் லோபோ, ‘‘இந்த பகுதியில் உள்ள பெட்ரோல் பங்குக்கு தினமும் 5 ஆயிரம் பேர் பெட்ரோல் நிரப்ப வரு கிறார்கள். அவர்களில் 2 ஆயிரம் பேர் பெண் களாக இருக்கிறார்கள். அவர்கள் சவுகரியமாக பெட்ரோல் நிரப்பிவிட்டு செல்லும் வகையில் இந்த பங்க் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அவர்களுக்கு வசதியாக பெண் ஊழியர்களை பணி அமர்த்தியுள்ளோம். பொதுவாக பெண் பணியாளர்கள் மென்மையான சுபாவத்துடனும், கண்ணியமான நடத்தையுடனும் செயல்படுவார்கள். காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை, காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை என இரண்டு ஷிப்ட்டுகளில் பணிபுரிகிறார்கள். அதற்கு பிறகு ஆண் ஊழியர்கள் பணியை தொடர்கிறார்கள்.
டீசல் நிரப்புவதற்கு கனரக வாகனங்கள் வரும்போது பெண் வாகன ஓட்டிகளுக்கும், பெண் ஊழியர்களுக்கும் ஏற்படும் சிரமத்தை தவிர்க்கும் வகையிலும் இந்த பெட்ரோல் பங்கை வடிவமைத்திருக்கிறோம்’’ என்கிறார்.