விழிப்புணர்வை விதைக்கும் ‘தந்தை’
72 வயதாகும் கங்கா ராம், போக்குவரத்து விதிமுறைகள் பற்றிய விழிப்புணர்வை வாகன ஓட்டிகளிடம் ஏற்படுத்துவதற்காக தினமும் 10 மணி நேரம் செலவிடுகிறார்.
72 வயதாகும் கங்கா ராம், போக்குவரத்து விதிமுறைகள் பற்றிய விழிப்புணர்வை வாகன ஓட்டிகளிடம் ஏற்படுத்துவதற்காக தினமும் 10 மணி நேரம் செலவிடுகிறார். இந்த விழிப்புணர்வின் பின்னணியில் அவருடைய மகனின் அகால மரணம் அமைந்திருக்கிறது. கங்கா ராம், வட கிழக்கு டெல்லியில் உள்ள சீலாம்பூர் பகுதியை சேர்ந்தவர். தன்னுடைய ஒரே மகனை சாலை விபத்தில் பறிகொடுத்து விட்டார். மகனின் இழப்பு மற்ற வாகன ஓட்டி களுக்கு சாலை விதிமுறைகள் பற்றிய படிப்பினையை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் முழு மூச்சோடு இயங்கிக்கொண்டிருக்கிறார். காலை 9 மணிக்கு சீலாம்பூர் சிக்னலில் பணியை தொடருபவர் இரவு 10 மணி வரை இடைவிடாமல் சுறுசுறுப்புடன் செயல்பட்டு கொண்டிருக்கிறார். அவசரப்பட்டு சாலையை கடப்பவர்களுக்கு அறிவுரையும் வழங்கிக்கொண்டிருக்கிறார். டி.வி. மெக்கானிக்கான கங்கா ராம் 30 ஆண்டுகள் அந்த தொழிலில் ஈடுபட்டு வந்திருக்கிறார். அந்த பகுதியில் டி.வி. பழுதுபார்க்கும் கடை நடத்தி சுற்றுவட்டார பகுதியை சேர்ந்தவர்களுக்கும் பரிச்சயமான நபராக விளங்கி இருக்கிறார். ஏற் கனவே போக்குவரத்து போலீசாருடன் குழுவாக இயங்கி சாலை போக்குவரத்து பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்திருக்கிறார். மகனின் மரணத்துக்கு பிறகு முழு நேரமாக இயங்க தொடங்கிவிட்டார்.
‘‘மகனின் மரணமும், மருமகளின் வேதனையும் என்னை வெகுவாக பாதித்துவிட்டன. டி.வி. பழுது பார்ப்பதில் முன்பை போல் வருமானம் கிடைப்பதில்லை. போக்கு வரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் போலீசாருடன் இணைந்து பகுதி நேரமாக ஈடுபட்டு வந்திருக்கிறேன். மகனின் மரணத்திற்கு பிறகு வாகன ஓட்டிகள் நலனை கருத்தில் கொண்டு முழு நேரமும் கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறேன். தினமும் 10 மணி நேரமாவது இதில் செலவிட்டுவிடுவேன். அதுதான் என் மனதுக்கு நிம்மதி அளிக்கிறது’’ என்கிறார்.