மாநில வளர்ச்சிக்காக ரூ.100 கோடி கடன்: அரசின் பிணைய பத்திரம் வைத்திருப்போருக்கு முதிர்வு தொகை

புதுவை மாநில வளர்ச்சிக்காக ரூ.100 கோடி கடன் பெறப்பட்டது. இதில் அரசின் பிணைய பத்திரம் வைத்திருப்போருக்கு முதிர்வு தொகை அடுத்த மாதம் வழங்கப்படும் என்று நிதித்துறை செயலாளர் அறிவித்துள்ளார்.;

Update: 2018-08-26 00:17 GMT
புதுச்சேரி,

புதுச்சேரி அரசு நிதித்துறை செயலாளர் கந்தவேலு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

புதுவை மாநில வளர்ச்சிக் கடனாக நிதித்துறையின் மூலம் கடந்த 19.9.2008 அன்று ரூ.100 கோடி கடன் (8.81 சதவீதம் வீதத்தில்) பெறப்பட்டது. அரசு பிணைய பத்திரம் வைத்திருப்போருக்கு உரிய தொகை அடுத்த மாதம்(செப்டம்பர்) 26-ந் தேதி அவரவர் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.

பிணைய பத்திரங்கள் வைத்திருப்போர், ஸ்டேட் வங்கி கிளைகள் மற்றும் அதன் உப வங்கிகள், அரசு கருவூலங்கள் ஆகியவற்றில் எவ்வாறு தற்போது பிணைய பத்திரத்தின் வட்டியை பெற்று வருகின்றனரோ அதனை அங்கு சமர்ப்பித்து முதிர்வு தொகையை பெற்றுக்கொள்ளலாம்.

வங்கி கணக்கு விவரங்கள் இல்லாத பட்சத்தில் பிணையப்பத்திரதாரர்கள் ரிசர்வ் வங்கியின் பொது கடன் பிரிவு அலுவலகத்தில் பிணையப்பத்திரங்களை முதிர்வு தேதிக்கு 20 நாட்களுக்கு முன்பாக சமர்ப்பிக்க வேண்டும். முதிர்வுதொகையை முன்பு அனுமதிக்கப்பட்ட இடங்களில் இல்லாது வேறு இடங்களில் பெற விரும்புவோர் பிணைய பத்திரங்களில் பின்புறம் அசலை பெற்றுக்கொண்டதாக சான்றளித்து அவற்றை இந்திய ரிசர்வ் வங்கியின் பொதுக்கடன் பிரிவுக்கு காப்புறுதி செய்யப்பட்ட பதிவுதபாலில் அனுப்ப வேண்டும். அதன் அடிப்படையில் அரசு கருவூலம் அல்லது ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா கிளைகள் அல்லது அதன் உப வங்கிகளின் கிளைகள் மூலம் பணம் பட்டுவாடா செய்யப்படும்.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்