காங்கேயம் அருகே ஜெபக்கூடத்தை சூறையாடிய மர்ம கும்பல், போலீசார் விசாரணை

காங்கேயம் அருகே ஜெபக்கூடத்தை மர்ம கும்பல் ஒன்று சூறையாடி சென்றது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2018-08-25 23:51 GMT

காங்கேயம்,

காங்கேயம் அருகே உள்ள வரதப்பம்பாளையம் சத்திரவலசு கிராமத்தில் உள்ள தோட்டத்தில் கிறிஸ்தவ அறக்கட்டளை ஒன்றுக்கு சொந்தமான சிறிய ஜெபக்கூடம் ஒன்று உள்ளது. இதை போதகர் சாமிநாதன் என்பவர் பராமரித்து வருகிறார். இங்கு மாதத்தில் 2 நாட்கள் மட்டும் ஜெபக்கூட்டத்தை அவர் நடத்தி வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று காலையில் ஜெபக்கூடத்துக்கு சாமிநாதன் சென்றுள்ளார். அப்போது, அந்த ஜெபக்கூடத்தின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது, அங்கிருந்த மின்விசிறி, மின்விளக்குகள், மேற்கூரை சிமெண்டு சீட்டுகள் சேதப்படுத்தப்பட்டு கிடந்தன. மேலும் சில பொருட்கள் தீவைத்து எரிக்கப்பட்டு கிடந்தன.

ஜெபக்கூடத்தின் கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம கும்பல் அங்கிருந்த பொருட்களை சூறையாடி இருப்பது தெரியவந்தது. இந்த ஜெபக்கூடத்துக்கு சாமிநாதன் எப்போதாவது வந்து செல்வதால், இந்த சம்பவம் எப்போது நடந்தது? என்று தெரியவில்லை.

இதுபற்றி போதகர் சாமிநாதன் நேற்று காங்கேயம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்