18-ம் கால்வாய் நீட்டிப்பு பகுதிக்கு தண்ணீர் திறப்பு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மலர் தூவி வரவேற்பு

18-ம் கால்வாய் நீட்டிப்பு பகுதியில் சோதனை ஓட்டத்துக்காக 200 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மதகுகளை திறந்து வைத்து மலர்தூவி வரவேற்றார்.

Update: 2018-08-25 23:36 GMT
உத்தமபாளையம்,

தேனி மாவட்டம் கூடலூர் வைரவன் ஆற்றில் தொடங்கி தேவாரம் சுத்தகங்கை ஓடை வரை 40.8 கி.மீ. தூரத்துக்கு 18-ம் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கால்வாய் மூலம் கோம்பை, தேவாரம், பண்ணைப்புரம், பல்லவராயன்பட்டி, தே.சிந்தலைச்சேரி, மேலச்சிந்தலைச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 44 குளங்களும் நிரம்பும். இந்த குளங்கள் மூலம் பல்லாயிரக்கணக்கான விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்றன.

இந்த நிலையில் தேவாரம் சுத்தகங்கை கால்வாயில் இருந்து பொட்டிப்புரம் வழியாக போடி தாலுகா பகுதிகளான ராசிங்காபுரம், சிலமலை, மேலசொக்கநாதபுரம், போடி ஆகிய பகுதிகள் பயன்பெறும் வகையில் சுமார் 14.10 கி.மீ. தூரம் கால்வாய் நீட்டிப்பு செய்து கொட்டக்குடி ஆற்றில் இணைக்க முடிவு செய்யப்பட்டன. இதற்கான பணிகள் கடந்த 2016-ம் ஆண்டு தொடங்கி, கடந்த மார்ச் மாதம் முடிவடைந்தது. இந்தநிலையில் 18-ம் கால்வாய் நீட்டிப்பு பகுதிகளுக்கு சோதனை ஓட்டத்திற்கு தண்ணீர் திறந்து விட முதல்-அமைச்சர் உத்தரவிட்டார்.

இதையடுத்து நேற்று தேவாரம் சுத்தகங்கை கால்வாயில் இருந்து மதகுகள் வழியாக தண்ணீர் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் தலைமை தாங்கினார். தேனி எம்.பி. பார்த்திபன், கம்பம் எம்.எல்.ஏ. ஜக்கையன், தேனி மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் சையதுகான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு மதகுகளை திறந்து வைத்தார். பின்னர் அவர்கள், மதகுகள் வழியாக சீறிப்பாய்ந்து வந்த தண்ணீரை மலர்தூவி வரவேற்றனர். மேலும் விவசாயிகள் கலசங்களில் கொண்டு வந்த புனிதநீரையும் ஊற்றி மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

பின்னர் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

உத்தமபாளையம், போடி ஆகிய தாலுகா பகுதிகள் பயன்பெறும் வகையில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை தற்போது முழுமையாக நிறைவேற்றி இருக்கிறோம். 18-ம் கால்வாய் நீட்டிப்பு பகுதிகளுக்கு 200 கனஅடி வீதம் 7 நாட்களுக்கு சோதனை ஓட்டத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்த பகுதிகளில் உள்ள 6 குளங்கள் நிரம்பி, சுமார் 946.16 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு, துணை முதல்-அமைச்சர் அளித்த பதில்கள் வருமாறு:-

கேள்வி:- தேவாரம் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சாக்குலூத்து மெட்டு சாலை திறக்கப்படுமா?

பதில்:-சாக்குலூத்து மெட்டு சாலை திறப்பது குறித்து ஏற்கனவே, வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனை அழைத்து வந்து ஆய்வு செய்தோம். எனவே இதுகுறித்து விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும்.

கேள்வி:- 18-ம் கால்வாயில் தண்ணீர் திறக்கப்படும் நாட்கள் அதிகரிக்கப்படுமா?

பதில்:- 18-ம் கால்வாய்க்கு தண்ணீர் திறப்பு என்பது 7 நாட்கள் தான் என அரசு ஆணை உள்ளது. எனவே நாட்களை அதிகரிப்பது குறித்து பரிசீலனை செய்யப்படும். இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

முன்னதாக அரசியல் சம்பந்தமான கேள்விகளை தவிர்க்குமாறு நிருபர்களிடம், துணை முதல்-அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

இதைத்தொடர்ந்து தேவாரம் பகுதியில் அட்டகாசம் செய்து வரும் காட்டுயானையை பிடிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து துணை முதல்-அமைச்சரிடம் மனு கொடுத்தனர்.

விழாவில் ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் ரவீந்திரநாத்குமார், தேனி நகர செயலாளர் கிருஷ்ணகுமார், ஒன்றிய செயலாளர் கணேசன், பெரியகுளம் ஒன்றிய செயலாளர் அன்னபிரகாஷ், பழனிசெட்டிபட்டி பேரூர் செயலாளர் தீபன் சக்கரவர்த்தி, சின்னமனூர் ஒன்றிய செயலாளர் விமலேஸ்வரன், நகர செயலாளர் கண்ணம்மாள் கார்டன் ராஜேந்திரன், தேனி மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் பாண்டியராஜ், தேவாரம் பேரூர் செயலாளர் வக்கீல் சீனிவாசன், போடி நகர் அ.தி.மு.க. செயலாளர் பழனிராஜ், போடி ஏலக்காய், காபி கூட்டுறவு விவசாய சங்க தலைவர் எம்.ஜெயராமன், போடி நகர் கூட்டுறவு கடன் சங்க தலைவர் ராஜா, துணை தலைவர் ஜெயராம்பாண்டியன், போடி நகர் வீட்டு வசதி சங்க தலைவர் அஜிஸ்கான், போடி ஒன்றிய செயலாளர் சற்குணம், டொம்புச்சேரி தொடக்க வேளாண்மை கடன் சங்க தலைவர் தங்கராஜ், ராசிங்காபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் ஒண்டிவீரன், சிலமலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு விவசாய கடன் சங்க தலைவர் ராமமூர்த்தி, சில்லமரத்துப்பட்டி தொடக்க வேளாண்மை கடன் சங்க தலைவர் சரவணன், போடி வெற்றிலை உற்பத்தியாளர் கூட்டு நலசங்க தலைவர் ஹரிகரன் மற்றும் கூட்டுறவு சங்கத்தின் நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்