சதுர்த்தி விழா: இயற்கை வர்ணம் பூசப்பட்ட விநாயகர் சிலைகளை பயன்படுத்துங்கள் - கலெக்டர் வேண்டுகோள்

விநாயகர் சதுர்த்தி விழாவில் இயற்கை வர்ணம் பூசப்பட்ட விநாயகர் சிலைகளையே பயன்படுத்துங்கள் என்று பொதுமக்களுக்கு கலெக்டர் வேண்டுகொள் விடுத்துள்ளார்.

Update: 2018-08-25 23:15 GMT
விழுப்புரம்,

விநாயகர் சதுர்த்தி விழா அடுத்த மாதம்(செப்டம்பர்) 13-ந்தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இதையொட்டி, விழுப்புரம் மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தியின்போது களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை வீட்டில் வைத்து பூஜித்த பிறகு நீர்நிலைகளில் கரைக்கப்படுவது வழக்கம். ஆனால் அண்மை காலமாக ரசாயன வர்ண பூச்சுகளுடன் கூடிய விநாயகர் சிலைகளை வழிபட்ட பின்னர் அவற்றை நீர்நிலைகளில் கரைப்பதால் நீர்நிலைகள் மாசுபடுகின்றன. இவ்வாறு நீர்நிலைகள் மாசுபடுவதை தடுக்கவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பொருட்டும் பொதுமக்கள் பின்வரும் நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.

களிமண்ணால் செய்யப்பட்டதும், சுடப்படாததும் மற்றும் எவ்வித ரசாயன கலவையற்ற கிழங்கு மாவு மற்றும் மரவள்ளிக்கிழங்கில் இருந்து தயாரிக்கும் ஜவ்வரிசி தொழிற்சாலை கழிவுகள் போன்ற சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருட்களால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை மட்டுமே நீர்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படும்.

நீரில் கரையும் தன்மையுடைய மற்றும் தீங்கு விளைவிக்காத இயற்கை வர்ணங்கள் பூசப்பட்ட விநாயகர் சிலைகளை பயன்படுத்திட வேண்டும். ரசாயன வர்ணம் பூசப்பட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க அனுமதிக்கப்பட மாட்டாது.

வழிபாட்டிற்கு பின்னர் விநாயகர் சிலைகளை மரக்காணம் முதல் கோட்டக்குப்பம் வரையுள்ள பொம்மியார்பாளையம், கைப்பானிக்குப்பம், எக்கியார்குப்பம் ஆகிய இடங்களில் உள்ள கிழக்கு கடற்கரை, அரகண்டநல்லூர் அதுல்யநாதேஸ்வரர் குளம், வீடூர், கோமுகி அணைகள், சங்கராபுரம், உளுந்தூர்பேட்டை, திருநாவலூர் ஆகிய இடங்களில் உள்ள ஏரிகள் ஆகியவற்றில் மட்டுமே கரைத்தல் வேண்டும். கடலோரத்தில் சிலைகளை கரைக்காமல் கடலினுள் குறைந்தது 500 மீட்டர் தூரம் எடுத்துச்சென்று கரைக்க வேண்டும்.

வழிபாடு செய்யப்பட்ட சிலைகளின் மேல் சாத்தப்பட்ட துணிகள், காகிதம் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களால் செய்யப்பட்ட பூக்கள், அலங்கார பொருட்கள் ஆகியவற்றை சிலைகளை கரைக்கும் முன்பே தனியாக அகற்றிவிட்டு பின் சிலைகளை கரைக்க வேண்டும். அகற்றப்பட்ட துணிகளை உள்ளூரில் உள்ள அனாதை விடுதிகளுக்கும், பூஜிக்கப்பட்ட பொருட்களில் மக்கும் பொருட்களை உரமாக்கவும், ஏனைய திடக்கழிவுகளை சுகாதார கேடு ஏற்படாமல் நிலத்தில் கொட்ட வேண்டும். வழிபாடு செய்யப்பட்ட சிலைகளை கரைக்கும் இடத்தில் துணிகள், திடக்கழிவுகள், அலங்கார பொருட்களை எரித்தல் கூடாது. விநாயகர் சதுர்த்தியை பாரம்பரிய வழக்கப்படி சுற்றுச்சூழலை பாதிக்காதவாறு கொண்டாட வேண்டும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்