நீலகிரியில் மேலும் 12 விடுதிகளுக்கு இன்று சீல் வைக்கப்படுகிறது: காலி செய்ய கெடு விதித்து உரிமையாளர்களுக்கு நோட்டீசு
நீலகிரியில் மேலும் 12 தனியார் விடுதிகளுக்கு இன்று(ஞாயிற்றுக்கிழமை) சீல் வைக்கப்படுகிறது. காலி செய்ய 24 மணி நேரம் கெடு விதித்து விடுதிகளின் உரிமையாளர்களுக்கு நோட்டீசு வழங்கப்பட்டு உள்ளது.
மசினகுடி,
நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே மசினகுடி, பொக்காபுரம், சிங்காரா, வாழைத்தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் பட்டா நிலங்களில் வீடுகள் கட்ட அனுமதி பெற்றுவிட்டு கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளது. அந்த கட்டிடங்கள் சொகுசு விடுதிகளாகவும் செயல்பட்டு வந்தன. அந்த விடுதிகள் யானை வழித்தடத்தில் உள்ளது என்றும், அவற்றை அகற்ற உத்தரவிட வேண்டும் என்றும் கடந்த 2008–ம் ஆண்டு சென்னையை சேர்ந்த யானை ராஜேந்திரன் என்ற வக்கீல் ஐகோர்ட்டில் பொதுநலவழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு மசினகுடி மற்றும் பொக்காபுரம் பகுதியில் யானை வழித்தடத்தில் உள்ள விடுதிகளை காலி செய்ய உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து விடுதிகளின் உரிமையாளர்கள் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தனர். அந்த வழக்கை நீதிபதி மதன் பி லோகூர் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.
கடந்த மாதம் நடந்த வழக்கு விசாரணையின்போது நீலகிரியில் யானை வழித்தடத்தில் எத்தனை விடுதிகள் உள்ளன?, அவற்றின் தன்மை மற்றும் முறையான அனுமதி பெறப்பட்டுள்ளதா? என்பது குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய கலெக்டருக்கு உத்தரவிடப்பட்டது. அதன்பேரில் அந்த அறிக்கையும் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் பொக்காபுரம், சிங்காரா, வாழைத்தோட்டம் பகுதியில் 39 தனியார் விடுதிகள், 390 குடியிருப்புகள் மற்றும் விவசாய நிலங்கள், அரசு கட்டிடங்கள் என மொத்தம் 821 கட்டிடங்கள் யானை வழித்தடத்தில் இருப்பதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. அதன்பின்னர் குடியிருப்புக்கான அனுமதி பெற்றுவிட்டு செயல்பட்டு வரும் 39 விடுதிகளில் 27 விடுதிகளுக்கு 48 மணி நேரத்தில் சீல் வைக்க வேண்டும் என்றும், மீதமுள்ள 12 விடுதிகளின் ஆவணங்களை சரிபார்த்து அனுமதி இல்லையெனில் சீல் வைக்க வேண்டும் என்றும் நீலகிரி மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிடப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுப்படி முதற்கட்டமாக 27 தனியார் விடுதிகளுக்கு கடந்த 12–ந் தேதி சீல் வைக்கப்பட்டது. பின்னர் மீதமுள்ள 12 தனியார் விடுதிகளின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டன.
அதில் பொக்காபுரம் பகுதியில் உள்ள ஜங்கில் அட் ரெசாட் மற்றும் இந்தி நடிகர் மிதுன் சக்கரவர்த்திக்கு சொந்தமான மொனார்ச் சப்பாரி பார்க் ஆகிய 2 விடுதிகளில் உள்ள 30 கட்டிடங்களில் 14 கட்டிடங்களுக்கு மட்டுமே முறையான அனுமதி இருப்பது தெரியவந்தது. மேலும் மற்ற 10 விடுதிகளும் முறையான அனுமதியின்றி செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 12 விடுதிகளில் உள்ள அனுமதியற்ற கட்டிடங்களுக்கு சீல் வைக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி கட்டிடங்களை காலி செய்ய அதன் உரிமையாளர்களுக்கு 24 மணி நேர கெடு விதித்து நேற்று நோட்டீசு வழங்கப்பட்டது. மசினகுடி ஊராட்சிக்கு உட்பட்ட வாழைத்தோட்டம் பகுதியில் 5 விடுதிகளுக்கு கூடலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மோகன் குமாரமங்கலம், ஊராட்சி செயலர் செந்தில்குமார், கிராம நிர்வாக அலுவலர் ராதிகா ஆகியோர் அடங்கிய குழுவினரும், சோலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பொக்காபுரம் பகுதியில் 7 விடுதிகளுக்கு செயல் அலுவலர் நந்தகுமார், வருவாய் ஆய்வாளர் ராமசுப்பு, கிராம நிர்வாக அலுவலர் பிச்சைக்கனி ஆகியோர் அடங்கிய குழுவினரும் நோட்டீசு வழங்கினர். இதைத்தொடர்ந்து அந்த 12 விடுதிகளுக்கும் இன்று(ஞாயிற்றுக்கிழமை) சீல் வைக்கப்படுகிறது.