கோத்தகிரியில் பரபரப்பு கூட்டுறவு சங்க தேர்தல் அலுவலரை வேட்பாளர்கள் முற்றுகை
கோத்தகிரியில் கூட்டுறவு சங்க தேர்தல் அலுவலரான சங்கரனை முற்றுகையிட்டு வேட்பாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கோத்தகிரி,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பஸ் நிலைய பகுதியில் தலைமை கூட்டுறவு சங்க பண்டக சாலை உள்ளது. இதற்கு 11 நிர்வாக இயக்குனர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடந்தது. அதில் அ.தி.மு.க.வை சேர்ந்த 19 பேர், தி.மு.க.வை சேர்ந்த 7 பேர், அ.ம.மு.க.வை சேர்ந்த 6 பேர், காங்கிரஸ் மற்றும் தே.மு.தி.க. சார்பில் தலா ஒருவர், 9 சுயேட்சைகள் என மொத்தம் 43 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். ஆனால் ஊட்டியில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட ஒப்புகை சீட்டுகள் கோத்தகிரிக்கு வர காலதாமதம் ஆனதால், அதை வேட்பாளர்களுக்கு உடனே வழங்க முடியவில்லை. தொடர்ந்து காத்திருந்த வேட்பாளர்கள் திடீரென தேர்தல் அலுவலரான சங்கரனை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே மாலை 5.45 மணிக்கு ஒப்புகை சீட்டுகள் கோத்தகிரிக்கு வந்து சேர்ந்தன. உடனே வேட்பாளர்களுக்கு ஒப்புகை சீட்டு வழங்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.