ஓசூரில் பல்வேறு அமைப்புகள் சார்பில் கேரள மக்களுக்கு வெள்ள நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு

ஓசூரில் பல்வேறு அமைப்புகள் சார்பில் கேரள மக்களுக்கு வெள்ள நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.;

Update: 2018-08-25 22:45 GMT
ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் செயல்பட்டு வரும் அனைத்து அரிமா சங்கங்கள் சார்பில், கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ. 10 லட்சம் மதிப்பிலான அரிசி, பருப்பு, போர்வை மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு நிவாரண பொருட்கள் வாகனம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், வருவாய்த்துறையினர் மற்றும் சில தனியார் நிறுவன அமைப்புகளிடம் வசூலிக்கப்பட்ட ரூ. 1.50 லட்சத்திற்கான வரைவோலையும் கேரளாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஓசூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட இந்த வாகனத்தை, இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி கொடியசைத்து அனுப்்பி வைத்தார். நிகழ்ச்சிக்கு, ஓசூர் உதவி கலெக்டர் விமல்ராஜ் முன்னிலை வகித்தார். இதில், ஓசூர் அரிமா சங்க தலைவர்கள் ஒய்.வி.எஸ்.ரெட்டி, குமார், முன்னாள் தலைவர் மோகன்குமார் மற்றும் நிர்வாகிகள், சூளகிரி ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் ஏ.வி.எம்.மது என்ற ஹேம்நாத், மாவட்ட அ.தி.மு.க. பிரதிநிதி சிட்டிஜெகதீசன், முன்னாள் ஓசூர் நகராட்சி கவுன்சிலர் பி.ஆர்.வாசுதேவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஓசூரில் செயல்பட்டு வரும் சிறு மற்றும் குறுந்தொழிற்சாலைகள் சங்கம்(ஹோஸ்மியா) சார்பில், கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில், ரூ. 1 லட்சம் மதிப்புள்ள சோப்பு உள்ளிட்ட பல்வேறு பொருட்களை, ஓசூர் உதவி கலெக்டர் விமல்ராஜிடம், ஹோஸ்மியா சங்க தலைவர் சேகர் தலைமையில் செயலாளர் முனுசாமி, பொருளாளர் கணேசன் மற்றும் சங்க நிர்வாகிகள் ஒப்படைத்தனர்.

இதேபோல், கிருஷ்ணகிரி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில், அரிசி, மளிகை பொருட்கள், உடைகள், போர்வை, வீட்டு உபயோக பொருட்கள், பால் பவுடர், பிஸ்கட், மருந்துகள் ஆகியவை சேகரிக்கப்பட்டு, மாவட்ட செயலாளர் கணேசன், மாவட்ட தலைவைர் தங்க முனியசாமி ஆகியோர் தலைமையில் கேரளாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியின்போது, ஓசூர் நகர செயலாளர் பாக்கியராஜ், ஒன்றிய தலைவர் சாமி, நகர பொருளாளார் கனகராஜ், மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

ஓசூரை சேர்ந்த திருநங்கை சக்தி தலைமையில் சமீரா, சித்ராம்மா, நயன்தாரா, உஷா, கவுசல்யா, முஷ்கான், சிவரஞ்சனி, மயூரியம்மா, உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு உதவும் வகையில் ரூ. 80 ஆயிரம் மதிப்புள்ள சேலைகள், சட்டை, பேண்ட், பற்பசை, பிரஷ், சோப்பு, ஷாம்பு, டவல், பிஸ்கட் உள்ளிட்ட நிவாரண பொருட்களை சேகரித்து நேற்று ஓசூர் தாசில்தார் முத்துப்பாண்டியிடம் ஒப்படைத்தனர்.

இந்த நிகழ்ச்சியின்போது, துணை தாசில்தார் ரமேஷ் மற்றும் அலுவலக ஊழியர்கள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்