போலீஸ் சீருடை அணிந்து மக்களை ஏமாற்றிய வாலிபர் கைது

கூத்தாநல்லூர் அருகே போலீஸ் சீருடை அணிந்து மக்களை ஏமாற்றிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2018-08-25 22:30 GMT
கூத்தாநல்லூர்,

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் அருகே உள்ள உச்சுவாடி, நேதாஜி தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜன். இவருடைய மகன் சுரேஷ்குமார் (வயது 26). இவரது பெற்றோர்கள் ஏற்கனவே இறந்துவிட்டனர். இதையடுத்து சுரேஷ்குமார், உச்சுவாடியில் தனது பாட்டி வீட்டில் வசித்து வந்தார். இந்தநிலையில் பட்டுக்கோட்டை, மாவூர், கச்சனம் போன்ற ஊர்களில் சுரேஷ்குமாரை போலீஸ் சீருடையில் பலர் பார்த்ததாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் அவர் போலீசில் எப்போது சேர்ந்தார்? என்ற சந்தேகமும் அப்பகுதி மக்களிடம் எழுந்தது. இந்த நிலையில், உச்சுவாடியில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு பலமுறை இரவு நேரத்தில் போலீஸ் சீருடையில் சுரேஷ்குமார் வந்து சென்றுள்ளார். இதனால் சுரேஷ்குமாரை இரவு நேரத்தில் மட்டும் போலீஸ் சீருடையில் பார்த்து வந்த அப்பகுதி மக்களுக்கு மேலும் சந்தேகம் ஏற்பட்டது.

இதுகுறித்து வடபாதிமங்கலம் போலீசில் அப்பகுதி மக்கள் சுரேஷ்குமார் போலீசில் வேலை பார்த்து வருகிறாரா? என்று கேட்டுள்ளனர். அதற்கு போலீசார் அப்படி ஒன்றும் இல்லை என்று கூறி விசாரணை நடத்தினர். தகவல் அறிந்ததும் சுரேஷ்குமார் தலைமறைவாகிவிட்டார். இந்தநிலையில் அவரை தேடிவந்த போலீசார் நேற்று காலை சுரேஷ்குமாரை கைது செய்தனர். மேலும் அவர் பயன்படுத்திய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சீருடை மற்றும் பேட்ஜ் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர். இதுகுறித்து வடபாதிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் எதற்காக போலீஸ் சீருடை அணிந்து நாடகமாடி மக்களை ஏமாற்றினார்? அல்லது வேறு ஏதேனும் முறைகேட்டில் ஈடுபட்டாரா? என்று பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்