ஈரோடு மாநகராட்சியில் ரூ.59 கோடியில் புதைவட மின்கம்பிகள் பதிக்கும் பணி தொடக்கவிழா
ஈரோடு மாநகராட்சியில் ரூ.59 கோடியில் புதைவட மின்கம்பிகள் பதிக்கும் பணி தொடக்க விழாவில் 3 அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
ஈரோடு,
தமிழ்நாட்டில் மத்திய அரசின் பங்களிப்புடன் ஒருங்கிணைந்த மின் மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் மின்சார கம்பங்கள் அகற்றப்பட்டு மின் இணைப்புகள் புதைவட கம்பிகளாக (அண்டர் கிரவுண்ட் கேபிள்) பதிக்கப்பட உள்ளன. ஏற்கனவே சென்னை மாநகராட்சியில் இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. அதற்கு அடுத்தப்படியாக ஈரோடு மாநகராட்சி பகுதியில் இந்த திட்டம் அமலுக்கு வந்து உள்ளது.
ஈரோடு மின்பகிர்மான வட்டத்துக்கு ரூ.161 கோடியே 27 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு இருக்கிறது. முதல் கட்டமாக ஈரோடு மாநகராட்சியில் (விரிவாக்கம் செய்யப்படாத பழைய மாநகராட்சி) புதைவட மின் கம்பிகள் பதிக்க ரூ.58 கோடியே 96 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் உயர் மின்னழுத்த கம்பிகள் 69.11 கி.மீட்டர் அளவுக்கும், தாழ்வு மின்னழுத்த கம்பிகள் 92.33 கி.மீட்டர் அளவுக்கும் புதைக்கப்பட உள்ளன. வீட்டு மின் இணைப்புகள் 617.48 கிலோ மீட்டர் அளவுக்கும் புதைக்கப்பட உள்ளன. இதன் மூலம் 95 ஆயிரத்து 275 மின் இணைப்புகள் புதைவட மின்கம்பி மூலம் மின் இணைப்பு வழங்கப்படுகிறது.
புதைவட மின் இணைப்பு வழங்கப்படுவதால் மாநகர பகுதியில் உள்ள மின் கம்பங்கள் அகற்றப்படும். சாலைகள் விரிவாக்கம் செய்ய தடை இருக்காது. இடி, மின்னல், புயல், மழையால் மின் இணைப்பு துண்டிக்காது. மின் தடை இல்லாத 24 மணி நேர மின்சார சேவை வழங்கப்படும்.
இதுபோன்ற பல்வேறு வசதிகளுடன் அமைக்கப்பட உள்ள புதைவட மின்கம்பிகள் பதிக்கும் பணி நேற்று தொடங்கியது. ஈரோடு ஈ.வி.என். ரோட்டில் உள்ள மின்சார வாரிய அலுவலக வளாகத்தில் நடந்த தொடக்க விழாவுக்கு ஈரோடு மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் தலைமை தாங்கினார். செல்வக்குமார சின்னையன் எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு, வி.பி.சிவசுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் பி.தங்கமணி, தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன், மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு எஸ்.சக்திகணேசன், மாநகராட்சி ஆணையாளர் சீனிஅஜ்மல்கான் ஆகியோர் கலந்து கொண்டு புதைவட மின்கம்பி பதிக்கும் பணிகளை தொடங்கி வைத்தனர்.
விழாவில் மின்சார வாரிய தலைமை பொறியாளர் (திட்டப்பணிகள்) விவேகானந்தன், துணைப்பொது மேலாளர் இந்திராணி, செயற்பொறியாளர்கள் கீதா, பழனிவேல், சின்னச்சாமி, தாரணி, மரியா, சாந்தி, செந்தில்குமார் உள்பட மின்சார வாரிய அதிகாரிகள், பணியாளர்கள், முன்னாள் துணை மேயர் கே.சி.பழனிச்சாமி, முன்னாள் மண்டல தலைவர்கள் ரா.மனோகரன், கேசவமூர்த்தி, சிந்தாமணி, தலைவர் ஜெகதீசன், கூட்டுறவு ஒன்றிய தலைவர் தெய்வநாயகம், அ.தி.மு.க. கட்சி நிர்வாகிகள் வீரக்குமார், டி.எஸ்.ஆர்.செந்தில்ராஜன், பி.பி.கே.மணிகண்டன், ஜீவா ராமசாமி உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக ஈரோடு மின்பகிர்மான வட்ட தலைமை பொறியாளர் எம்.சந்திரசேகர் வரவேற்று பேசினார். முடிவில் மேற்பார்வை பொறியாளர் டி.ராஜேந்திரன் நன்றி கூறினார். நேற்று தொடங்கிய புதைவட மின்கம்பிகள் பதிக்கும் பணி 2 ஆண்டுகளில் முழுமை பெறும் என்று அமைச்சர் பி.தங்கமணி கூறினார்.