திருப்புவனம் அருகே ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்க எதிர்ப்பு

திருப்புவனம் அருகே மணலூரில் ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

Update: 2018-08-25 21:30 GMT

மானாமதுரை,

மதுரை–ராமேசுவரம் அகல ரெயில் பாதையில் உள்ள ஆளில்லா ரெயில்வே கேட்களை தென்னக ரெயில்வே நிர்வாகம் அகற்றி வருகிறது. விபத்துகளை குறைப்பதற்காக ஆளில்லா ரெயில்வே கேட்டுக்கு பதிலாக சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடக்கிறது. இதேபோன்று திருப்புவனம் அருகே மணலூரில் ஆளில்லா ரெயில்வே கேட்டை அகற்றிவிட்டு, அங்கு சுரங்கப்பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி பணிகள் மேற்கொள்வதற்காக ரெயில்வே ஊழியர்கள் மற்றும் ஒப்பந்தகாரர்கள் வந்தனர். ஏற்கனவே சுரங்கப்பாதை அமைக்கக்கூடாது என்று அப்பகுதி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்தநிலையில் சுரங்கப்பாதை பணிகள் குறித்து தகவல் அறிந்த மணலூர், அகரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, ரெயில் தண்டவாளத்தை கடந்து செல்லும் இந்த பாதை வழியே பொட்டப்பாளையம், பாட்டம், அகரம் உள்ளிட்ட 20–க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வாகன போக்குவரத்து இருந்து வருகிறது. இதுதவிர இங்கு விவசாய நிலங்கள் ஏராளமானவை உள்ளன. இந்த பாதை வழியே பஸ் போக்குவரத்தும் நடந்து வருகிறது. ஆனால் இங்கு சுரங்கப்பாதை அமைத்தால் கனரக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படும். மேலும் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டால் சுமார் 10 கி.மீ. சுற்றிதான் செல்ல முடியும். இதனால் விவசாயிகள் விளை பொருட்களை கொண்டு செல்வதில் சிக்கலை சந்திக்க நேரிடும். மேலும் பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். எனவே சுரங்கப்பாதை அமைக்காமல் ரெயில்வே கேட் தொடர வேண்டும் என்றனர்.

முன்னதாக விவசாயிகள் போராட்டத்தை தொடர்ந்து பணிகள் மேற்கொள்ள வந்த ரெயில்வே ஊழியர்கள் திரும்பி சென்றனர்.

மேலும் செய்திகள்