காற்றுக்காக கதவை திறந்து வைத்து இருந்தார்: வீட்டில் 10 பவுன் நகை, பணம் திருட்டு

காற்றுக்காக வீட்டின் கதவை திறந்து வைத்து தூங்கிய மளிகை கடைக்காரர் வீட்டுக்குள் நள்ளிரவில் புகுந்த மர்மநபர்கள் 10 பவுன் நகைகள், ரூ.1¾ லட்சம் மற்றும் 2 செல்போன்களை திருடிச்சென்று விட்டனர்.

Update: 2018-08-25 21:30 GMT
பூந்தமல்லி,

காஞ்சீபுரம் மாவட்டம் மாங்காடு அடுத்த வடக்கு மலையம்பாக்கம், சுந்தர் நகரைச் சேர்ந்தவர் ராஜ்குமார்(வயது 38). இவர், தனது வீட்டின் முன்புறம் மளிகை கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி கலைச்செல்வி.

நேற்று முன்தினம் இரவு வீட்டில் புழுக்கமாக இருந்ததால், காற்றுக்காக வீட்டின் முன்பக்க கதவை திறந்து வைத்து விட்டு தூங்கியதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் நள்ளிரவில் வீட்டுக்குள் நைசாக புகுந்த மர்மநபர்கள், பீரோவில் இருந்த 10 பவுன் நகைகள், ரூ.1¾ லட்சம் மற்றும் 2 செல்போன்களை திருடினர். அப்போது சத்தம் கேட்டு ராஜ்குமார் திடுக்கிட்டு எழுந்தார்.

உடனே மர்மநபர்கள் நகை, பணம், செல்போன்களுடன் தப்பி ஓடிவிட்டனர். இதனால் அதிர்ச்சிஅடைந்த ராஜ்குமார், மர்மநபர்களை விரட்டிச்சென்று பிடிக்க முயன்றார். ஆனால் அவரால் முடியாமல் பாதி வழியில் நின்றுவிட்டார்.

பின்னர் இதுகுறித்து மாங்காடு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்குசென்று விசாரணை நடத்தினர். மேலும் இதுபற்றி மாங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்