பாளையங்கோட்டையில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அஸ்திக்கு அரசியல் கட்சியினர் அஞ்சலி
பாளையங்கோட்டையில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அஸ்திக்கு அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்தினார்கள்.
நெல்லை,
பாளையங்கோட்டையில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அஸ்திக்கு அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்தினார்கள்.
வாஜ்பாய் அஸ்தி
முன்னாள் பிரதமர் வாஜ்பாய், கடந்த 16–ந்தேதி இறந்தார். அவருடைய அஸ்தி கன்னியாகுமரி கடல், பாபநாசத்தில் உள்ள தாமிரபரணி ஆற்றில் கரைப்பதற்காக டெல்லியில் இருந்து தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கிருந்து அந்த அஸ்தியை ரதம்போல் அலங்கரிக்கப்பட்ட வேனில் ஒவ்வொரு ஊர் ஊராக சென்று வந்தது. இந்த ரதத்தில் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன், அஸ்தியுடன் வந்தார்.
இந்த அஸ்தி 2 கலசங்களில் நேற்று திருச்செந்தூருக்கு வந்தது. அங்கிருந்து புறப்பட்டு பாளையங்கோட்டை ராமசாமி கோவில் திடலுக்கு வந்தது. அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. பாரதீய ஜனதா கட்சியினர் மாநில துணை தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள். இதில் மாவட்ட தலைவர் தயாசங்கர், விவசாய அணி மாநில பொதுச்செயலாளர் கணேஷ்குமார் ஆதித்தன், மாவட்ட பொதுச்செயலாளர்கள் சுரேஷ், பாலாஜி கிருஷ்ணசாமி, இளைஞர் அணி பொதுச்செயலாளர் வேல்ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அ.தி.மு.க.– காங்கிரசார் அஞ்சலி
அ.தி.மு.க.வினர் நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள். இதில் அமைப்பு செயலாளர்கள் சுதாபரமசிவன், மாவட்ட அவை தலைவர் பரணி சங்கரலிங்கம், ஜெயலலிதா பேரவை செயலாளர் ஜெரால்டு, துணைதலைவர் கணபதி சுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
காங்கிரசார் மாவட்ட தலைவர்கள் சங்கரபாண்டியன், என்.கே.வி.சிவகுமார் ஆகியோர் தலைமையில் வாஜ்பாய் அஸ்திக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.
தி.மு.க மாவட்ட செயலாளர்கள் இரா.ஆவுடையப்பன், சிவபத்மநாபன், முன்னாள் எம்.எல்.ஏ. அப்பாவு ஆகியோர் தலைமையில் தி.மு.க.வினர் வாஜ்பாய் அஸ்திக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள். இதேபோல் பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்புகளை சேர்ந்தவர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.
இதைத்தொடர்ந்து 2 கலசங்களும் அங்கிருந்து புறப்பட்டு நாங்குநேரி, வள்ளியூர், பணகுடிக்கு சென்றது. அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்கு பிறகு ஒரு கலசம் ஆரல்வாய்மொழிக்கு சென்றது. மற்றொரு கலசம் அங்கிருந்து ஊர்வலமாக களக்காடு, கூனியூர், கல்லிடைக்குறிச்சி, அம்பை வழியாக விக்கிரமசிங்கபுரத்திற்கு சென்றது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணிக்கு பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் அந்த அஸ்தி கரைக்கப்படுகிறது.