பெண்ணுரிமை போற்றிய பல்துறை வித்தகர்

திருவாரூர் விருத்தாசல முதலியாரின் மகன் திரு.வி.கல்யாணசுந்தரனார் (திரு.வி.க.), தமிழ்த் தென்றலாக தமிழுக்குத் தொண்டு செய்தவர். அன்றைய அரசியலில் தடம் பதித்தவர். பெண்ணுரிமையைப் போற்றிய பேரறிவாளர். தொழிற்சங்கத் தந்தை. தமிழ் வளமும் ஆங்கில வளமும் ஒருங்கே அமையப்பெற்றவர்.

Update: 2018-08-25 04:56 GMT
காந்தியடிகள் தமிழகத்துக்கு முதன்முறையாக வந்தபோது காங்கிரசின் பொதுக்கூட்டத்தில் அவர் நிகழ்த்திய ஆங்கிலச் சொற்பொழிவை தமிழில் மொழிபெயர்த்தவர் திரு.வி.க.தான். காந்தியடிகள் பற்றி முதன்முதலில் தமிழில் நூல் எழுதிய பெருமையும் திரு.வி.க.வையே சாரும். காந்தியடிகளின் எளிமையான வாழ்க்கை முறை, சாந்தமான தோற்றம் ஆகியவற்றால் ஈர்க்கப்பட்ட திரு.வி.க அவரை ‘அடிகள்’ என்று பெருமையோடு அழைத்தார்.

விருத்தாசல முதலியார்-சின்னம்மா தம்பதியரின் இரண்டாவது மகனாக 1883-ம் ஆண்டு ஆகஸ்டு 26-ந்தேதி துள்ளம் கிராமத்தில் திரு.வி.க. பிறந்தார். பல்துறை வித்தகரான இவர், முதலில் பின்னி கம்பெனியில், பின்பு ஸ்பென்சர் கம்பெனியில் பணிபுரிந்தார். பிறகு தமது தமையனாரின் அச்சகத்தில் இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்தார். வெஸ்லி மிஷன் பள்ளியில் ஆசிரியப் பணி ஏற்றார். ஓராண்டு வெஸ்லி கல்லூரியில் தமிழாசிரியராகப் பணிபுரிந்தார்.

பெண்ணுரிமையை போற்றிய திரு.வி.க. ‘பெண்ணின் பெருமை’ என்ற நூலை படைத்தார். பெண்ணுரிமைக்கு அடிப்படையானது பெண் கல்வி என்பதை அறிந்த இவர் ஆயிரம் விளக்குப் பகுதியில் ‘பவானி பாலிகா’ என்ற பள்ளியைத் தொடங்கினார். இவருடன் பணிபுரிந்த மார்த்தா அம்மையாரும் அழகாக பேசக்கூடியவர். ஒரு கூட்டத்தில் பேசச்சென்றபோது, அக்கூட்டம் ஏன் ஒரு பெண்கள் சங்கமாக அமையக்கூடாது என்று எண்ணிய திரு.வி.க. ராயப்பேட்டையில் மாதர் சங்கத்தை ஏற்படுத்தினார்.

ராமாமிர்தம் அம்மையார், மருத்துவர் முத்துலட்சுமி அம்மையார் ஆகியோரின் கருத்துகளை ஆதரித்து பேசினார். மருத்துவர் முத்துலட்சுமி அம்மையார் சட்டசபையில் கொண்டு வந்த தேவதாசி ஒழிப்புச்சட்டத்தை ஆதரித்தார். நீதிபதி சதாசிவ ஐயரிடம் கலந்தாலோசித்து, விதவைப் பெண்களின் மறுமணத்திற்கான அமைப்பு ஒன்றை ஏற்படுத்தினார். பின்னர் இது வடநாட்டில் உள்ள அத்தகைய அமைப்பு ஒன்றுடன் இணைக்கப்பட்டது.

13-9-1912 அன்று கமலாம்பிகையை மணந்தார். திருமணமானதும் இவரது மனைவி கமலாம்பாள் தமக்கு பொன் நகைகள், பட்டுப்புடவைகள் வேண்டாம். கல்வி கற்றுக்கொடுத்தால் போதும் என்று கேட்டுக்கொண்டார். திரு.வி.க.வும் மனமுவந்து கல்வி கற்பிக்க ஏற்பாடு செய்தார். ஆனால் திரு.வி.க.வின் தாயார் அதனை விரும்பவில்லை.

உடனே திரு.வி.க. தனிக்குடித்தனம் போக எண்ணினார். கமலாம்பிகையோ, கூட்டுக்குடும்பம் பிரியக்கூடாது என்றும் இரவு நேரங்களில் தமக்கு கல்வி கற்றுக்கொடுத்தால் போதும் என்றும் கூறிவிட்டார். மனைவியின் மாண்பை வியந்த திரு.வி.க. அவருக்கு அவ்வையாரின் பாடல்கள், பெரியபுராணம் ஆகியவற்றை கற்றுக்கொடுத்தார். தமது மனைவி இயற்கையிலேயே அறிவுடையவள் என்பதை உணர்ந்தார்.

கபாலீசுவரர், பார்த்த சாரதி கோவில்களுக்குப் போகும்போது அங்கு அமர்ந்து தமிழ் இலக்கணம், இலக்கியம் கற்றுக்கொடுத்தார். திருவொற்றியூரில் இருந்த கமலாம்பிகையின் பெரியப்பா வீட்டுக்கு வார இறுதியில் வெள்ளிக்கிழமைகள் மாலையிலேயே இருவரும் சென்றுவிடுவர். அச்சமயங்களில் திருவொற்றியூர் கடற்கரையில் தமிழ்ப் பாடம் தொடர்ந்தது. கமலாம்பிகை நன்கு பாடக்கூடியவர் என்பதையும் இங்குதான் திரு.வி.க. அறிந்துகொண்டார்.

ஞாயிறு மாலை திருவல்லிக்கேணி சபாவில் பெரியபுராணச் சொற்பொழிவில் தவறாமல் வந்துவிடுவார். இவ்வாறுதான் தனது மனைவி கமலாம்பிகைக்குக் கல்வி புகட்டினார். ஆனால் கமலாம்பிகை 18-9-1918 அன்று மரணம் அடைந்துவிட்டார்.

சாதிமுறையும், பெண் உரிமை மறுப்பும்தான் இந்தியாவின் பிற்போக்கான நிலைக்கு காரணம் என்று எழுதி வந்தார். தியோசாபிகல் சங்கம் உலக சகோதரத்துவத்தை வலியுறுத்தி வந்தது. இதன் ஒரு பிரிவான கலாச்சேத்ராவை உருவாக்கிய ருக்மணிதேவியின் காதல் திருமணத்தை சாதி மறுப்புத் திருமணமாக 1930-ம் ஆண்டு திரு.வி.க. நடத்திவைத்தார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த பலரின் சீற்றத்தையும் சமாளித்தார்.

‘நோயை அவ்வப்போது ஒதுக்கும் மருந்து தக்கதாகாது. சாதி நோயை அறவே நீக்கவல்ல மருந்து தேவை’ என்று உணர்ந்து சாதி மறுப்பு திருமணங்களை நடத்திவைத்தார்.

சென்னையின் சூளைப் பகுதியில் இயங்கிய வெங்கடேச குணாமிர்த வர்ஷணிசபை என்ற சமயசபைக்கு 1908-ம் ஆண்டு செல்வபதி செட்டியார் தலைவரானார். ஞாயிறுதோறும் நடைபெறும் கூட்டங்களில் சொற்பொழிவுகள் முடிந்ததும், தொழிலாளர்கள் தங்கள் குறைகளைக் கூறுவது வழக்கம்.

தொழிலாளர்களுக்கு என்று அமைப்பு ஒன்றை உருவாக்க விரும்பிய செல்வபதி செட்டியார், தொழிலாளர்களிடம் உரையாற்றத் தகுதிவாய்ந்தவர் யார் என்று ஆராய்ந்து, சபாவின் சார்பில் உரையாற்ற திரு.வி.க.வை அழைத்தார். கட்டுக்கடங்காத எண்ணிக்கையில் தொழிலாளர்கள் திரண்ட இக்கூட்டத்தில் திரு.வி.க.வின் உரையைக் கேட்ட தொழிலாளர்களிடையே தொழிற்சங்கம் எப்போது தொடங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு உருவானது.

அதன் விளைவாக 27-4-1918 அன்று சென்னைத் தொழிலாளர் சங்கம் முறையாக தொடங்கப்பட்டது. சென்னை தொழிற்சங்கத்துக்கு பிறகு 27 தொழிற்சங்கங்கள் தொடங்கப்பட்டன. இவற்றின் பொறுப்பாளர்களாக வாடியா, திரு.வி.க., செல்வபதி செட்டியார் ஆகியோர் விளங்கினர். 1920-ம் ஆண்டு சென்னைத் தொழிலாளர் சங்க ஆண்டுவிழாவுக்குப் பின் சென்னையில் மத்திய தொழிலாளர் சங்கம் ஏற்படுத்தப்பட்டது. அதன் தலைவராக திரு.வி.க. தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1921-ம் ஆண்டு பக்கிங்ஹாம் ஆலையில் ஆறு மாதங்களாக நடைபெற்ற வேலை நிறுத்தத்தின்போது திரு.வி.க.வை நாடு கடத்த முயற்சித்தனர். அவரை நாடு கடத்தினால் தமிழகத்தில் குழப்பம் ஏற்படும் என்று ஆளுநர் வில்லிஸ்டனுக்கு அறிவுறுத்தப்பட்டது. எனவே, திரு.வி.க.வை ஆளுநர் வரவழைத்து எச்சரித்து அனுப்பினார்.

1947-ம் ஆண்டு பக்கிங்ஹாம் கர்னாடிக்மில் தொழிலாளர் போராட்டம் வலுத்தது. அப்போதிருந்த தலைவர் அந்தோணிப் பிள்ளை நாடு கடத்தப்பட்டார். மீண்டும் தொழிலாளர்கள் திரு.வி.க.வை அணுகி தலைமைப் பொறுப்பினை ஏற்கும்படி வேண்டினர். திரு.வி.க.வும் மறுக்கவில்லை. அவரை நாடு கடத்தவோ சிறையிலடைக்கவோ அரசு முன்வரவில்லை. வீட்டுக் காவலில் வைத்தது.

இதழுலகில் திரு.வி.க.வின் தொண்டு சிறப்பானது. இவரது 21-வது வயதில் தொடங்கி 71 வயது வரை அறுபதுக்கும் மேற்பட்ட அரிய நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். இறுதியில், 1953-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17-ந்தேதி திரு.வி.க. மரணம் அடைந்தார்.

பரலி சு.நெல்லையப்பர் கூறியதைப் போலே, “திரு.வி.க.வுக்கு நிகராகச் சொல்லக் கூடியவர் திரு.வி.க. ஒருவரே!”. தொட்ட துறைகளில் எல்லாம் முத்திரை பதித்த திரு.வி.க.வை என்றும் போற்றுவோம்.

நாளை (ஆகஸ்டு 26-ந்தேதி) திரு.வி.க. பிறந்த நாள்.

-பேராசிரியை பானுமதி தருமராசன்

மேலும் செய்திகள்