புதிதாக உருவாகும் உயிரினங்கள்
வெவ்வேறு பேரினங்களைச் சேர்ந்த தாவரங்களை கலப்பினம் செய்வதன் மூலம் புதிய வகை தாவரங்களை உருவாக்குவது போல் விலங்குகளிலும் கலப்பினம் மூலம் முற்றிலும் புதிய வகை விலங்குகள் உருவாக்கப்படுகின்றன.
ஆண் சிங்கத்துக்கும் பெண் புலிக்கும் இடையில் கலப்பின முறை மூலம் உருவாக்கப்படும் விலங்கான ‘லைகர்‘ இதற்கு ஓர் உதாரணம்.
சுமார் 12 அடி நீளம், 400 கிலோவுக்கும் அதிகமான எடை என்று பிரமாண்ட உருவில் நிற்கும் ‘லைகர்‘ தன்னை வளர்ப்பவரை ஒரு குழந்தையைப் போலக் கொஞ்சுகிறது. பெண் சிங்கமா அல்லது உடலில் கோடுகள் இல்லாத புலியா? என்று குழப்பம் தரும் தோற்றம் கொண்ட அந்த விலங்கு, கூட்டாக வாழும் சிங்கத்தின் குணத்தையும் நீச்சல் போன்ற விளையாட்டுகளில் ஆர்வம் செலுத்தும் புலியின் குணத்தையும் கொண்டது. இதே போல் இன்னும் சில கலப்பினங்கள் உண்டு. ஆண் புலிக்கும் பெண் சிங்கத்துக்கும் பிறக்கும் விலங்கு ‘டைகான்‘ எனப்படுகிறது. இதுவும் லைகர் போலவே அசுர வளர்ச்சி கொண்ட விலங்குதான். இயற்கைக்கு மாறாக உருவாக்கப்படும் இதுபோன்ற விலங்குகள் உண்மையில் மகிழ்ச்சியாக வாழமுடியுமா? நிச்சயம் இல்லை என்பதுதான், ஒரே பதில்.
காரணம், இது போன்ற விலங்குகளுக்கு என்று தனியே ஒரு குணம் இல்லை என்பதால், இவற்றின் வாழ்க்கைமுறை மிகவும் சிக்கலானதாகி விடுகிறது. தவிர இந்த விலங்குகளுக்கு ஹார்மோன் பிரச்சினைகள், புற்றுநோய், மூட்டு வீக்கம் போன்ற பாதிப்புகள் வரும்.
கலப்பின உயிரினம் என்பதால் இவற்றுக்குச் சத்தான உணவுகள் அளிக்கப்பட வேண்டியது அவசியம். ஆனால், இவற்றை பொதுமக்களின் பார்வைக்கு வைத்துப் பணம் சம்பாதிக்கும் நிறுவனங்களும் தனிநபர்களும், அதன் உணவு முறையில் அக்கறை காட்டுவதில்லை. இதனாலேயே இந்த விலங்குகள் சில ஆண்டுகளிலேயே பரிதாபமாக இறந்துவிடுகின்றன. அல்லது கடுமையான உடல் பாதிப்புகளால் அவதியுறுகின்றன.
மேலும், இந்த விலங்குகளை வயிற்றில் சுமக்கும் தாய் விலங்குகளும் பெரும் துயரத்தை அனுபவிக்கின்றன. லைகர் போன்ற விலங்குகள் பிறக்கும்போதே அளவில் பெரியதாக இருக்கும். இதனால் அதைப் பிரசவிக்கும் தாய்ப் புலி, பிரசவத்தின்போதே பெரும்பாலும் இறந்துவிடும். பெரும்பாலும் அறுவை சிகிச்சை மூலம்தான் லைகர்கள் பிறக்கின்றன என்று விலங்குநல ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். லைகரின் வளர்ச்சி காலம், அதாவது முழுவளர்ச்சிக்கான காலம் என்பது புலி அல்லது சிங்கத்தின் வளர்ச்சி காலத்தைவிட மிகவும் நீண்டது. இதனாலேயே, வாழ்நாள் முழுதும் லைகர் வளர்ந்துகொண்டே இருக்கும் என்று சிலர் கருதுவது உண்டு. தங்களால் சமாளிக்க முடியாத அளவுக்கு பிரமாண்டமாக வளர்ந்து நிற்கும் லைகர்களை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அல்லது தனிநபர்கள், அங்கீகாரம் பெற்ற விலங்கு காப்பகங்களில் ஒப்படைக்கிறார்கள். சிலர் யாருக்கும் தெரியாமல் பரிதாபத்துக்குரிய அந்த விலங்குகளை கொன்றுவிடுவதும் நடக்கிறது.