மும்பை ராணி பூங்காவில் இந்தியாவின் முதல் பென்குயின் உயிரிழப்பு

மும்பை ராணி பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த இந்தியாவின் முதல் பென்குயின் உயிரிழந்தது பொதுமக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2018-08-25 00:21 GMT
மும்பை,

அண்டார்டிகா போன்ற பனி பிரதேசங்களில் வாழும் பென்குயின் பறவைகள் மும்பையில் உள்ள ராணி பூங்காவில் வைப்பதற்காக கடந்த 2016-ம் ஆண்டு மும்பை மாநகராட்சியால் வாங்கப்பட்டது. பென்குயின் பறவைகள் பல கோடி ரூபாய் செலவில் ராணி பூங்காவில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த பறவைகளை மும்பை மக்கள் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளும் பார்த்து ரசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் பிளப்பர் என்ற பென்குயின் முட்டையிட்டது. அந்த முட்டை இன்குபேட்டரில் வைத்து பாதுகாக்கப்பட்டது. இதையடுத்து கடந்த 15-ந் தேதி அந்த முட்டையில் இருந்து பென்குயின் குஞ்சு வெளியே வந்தது. அது இந்தியாவில் பிறந்த முதல் பென்குயின் ஆகும்.

அந்த பென்குயின் குஞ்சை ராணி பூங்கா ஊழியர்கள் மற்றும் கால்நடை மருத்துவர்கள் கவனமாக பாதுகாத்து வந்தனர். இந்த நிலையில் கடந்த புதன்கிழமை இரவு இந்தியாவின் முதல் பென்குயின் திடீரென்று உயிரிழந்தது. பாம்பே கால்நடை ஆஸ்பத்திரி பேராசிரியர் மற்றும் டாக்டர்கள் நடத்திய உடற்கூறு ஆய்வில் பென்குயின் குஞ்சு கல்லீரல் செயல் இழப்பு உள்ளிட்ட கோளாறால் உயிரிழந்தது தெரியவந்தது.

இந்தியாவின் முதல் பென்குயின் பறவை உயிரிழந்தது பொதுமக்கள் மற்றும் விலங்கு நல ஆர்வலர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்