தடுப்பு கட்டையில் கார் மோதல்; பெண் பலி

உளுந்தூர்பேட்டை அருகே தடுப்பு கட்டையில் கார் மோதிய விபத்தில் பெண் பலியானார். மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர்.

Update: 2018-08-24 21:45 GMT
உளுந்தூர்பேட்டை, 

திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு தாலுகா புளியூர் பகுதியை சேர்ந்தவர் ஹரி(வயது 35). இவர் தனது மனைவி சக்திரேகா(32), தம்பி ரகுபதி, மாமியார் முகுந்தகுமாரி(64), உறவினர் சித்ரா ஆகியோருடன் திருச்சி ஸ்ரீரங்கத்துக்கு ஒரு காரில் புறப்பட்டார். காரை ரகுபதி ஓட்டினார். இவர்களது கார் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உளுந்தூர்பேட்டை அடுத்த மேட்டத்தூர் பகுதி அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது ரகுபதியின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையின் நடுவில் இருந்த தடுப்பு கட்டையில் திடீரென மோதி விபத்துக்குள்ளானது.

இதில் முகுந்தகுமாரி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். ஹரி உள்ளிட்ட 4 பேரும் படுகாயமடைந்தனர். இவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் மேல்சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே விபத்து பற்றி அறிந்த திருநாவலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்து குறித்து விசாரணை நடத்தினர். பின்னர் முகுந்தகுமாரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்