கிருஷ்ணகிரியில் அரசு டாக்டர்கள் ஊர்வலம்

மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையாக ஊதியம் வழங்கக்கோரி கிருஷ்ணகிரி அரசு டாக்டர்கள் சார்பில் ஊர்வலம் நடைபெற்றது.

Update: 2018-08-24 23:14 GMT
கிருஷ்ணகிரி,

மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையான ஊதியம் வழங்கக்கோரி அரசு டாக்டர்கள் தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். முதல் கட்டமாக கடந்த 1-ந் முதல் 3-ந் தேதி வரை கோரிக்கை அட்டையை அணிந்து பணியில் ஈடுபட்டனர்.

கடந்த 20-ந் தேதி அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிலையங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதன் தொடர்ச்சியாக நேற்று மதியம் கிருஷ்ணகிரியில் ஊர்வலம் நடந்தது. இதற்கு அனைத்து மருத்துவர் சங்க கூட்டு நடவடிக்கை குழுவை சேர்ந்த டாக்டர் ராமநாதன் தலைமை தாங்கி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.

கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் தொடங்கிய ஊர்வலம் காந்தி சாலை, டி.பி. ரோடு வழியாக புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணாசிலை முன்பு முடிந்தது. பின்னர் கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று கோரிக்கை மனுவை கொடுத்தனர். இது குறித்து டாக்டர்கள் கூறியதாவது:-

வருகிற 27-ந் தேதி முதல் அனைத்து விதமான திறனாய்வு கூட்டங்களையும் புறக்கணித்து, அனைத்து சிறப்பு திட்டங்களுக்கான நிர்வாக பணிகளை புறக்கணிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அரசு கண்டு கொள்ளாத பட்சத்தில், வரும் செப்டம்பர் 12-ந் தேதி தலைமை செயலகம் நோக்கி நடைபயணம் மேற்கொள்ளவும், 21-ந் தேதி மாநிலம் முழுவதும் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினார்.

இதில், டாக்டர்கள் கைலாஷ், சதீஷ், கோபி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்