தொடர் மழையால் முள்ளிக்கொரை கிராமத்தில் புதிதாக போடப்பட்ட தார்ச்சாலை பெயர்ந்தது, வாகன ஓட்டிகள் அவதி

தொடர் மழையால் முள்ளிக்கொரை கிராமத்தில் புதிதாக போடப்பட்ட தார்ச்சாலை பெயர்ந்தது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து உள்ளனர்.

Update: 2018-08-24 22:48 GMT

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சியில் மொத்தம் 36 வார்டுகள் உள்ளன. ஊட்டி அருகே உள்ள முள்ளிக்கொரை கிராமம் 28–வது வார்டுக்குட்பட்டது ஆகும். இந்த கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு வசிக்கும் பெரும்பாலானோர் விவசாயம் மற்றும் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகிறார்கள். கர்நாடகா தோட்டக்கலை பூங்காவில் இருந்து முத்தோரை செல்வதற்கு பெரும்பாலானோர் முள்ளிக்கொரை கிராமம் வழியாகத்தான் செல்கிறார்கள். இதனால் அப்பகுதியில் எப்போதும் வாகனங்கள் சென்று வந்து கொண்டு இருக்கும்.

முள்ளிக்கொரை கிராமத்தில் உள்ள முக்கிய சாலை மிகவும் பழுதடைந்து காணப்பட்டது. இதனால் இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்தனர். அதனை தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஊட்டி நகராட்சி சார்பில் தார்ச்சாலை போடப்பட்டது.

ஊட்டியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த தொடர் மழையால் புதிதாக போடப்பட்ட சாலையின் நடுவே 2 நாட்களுக்கு முன்பு விரிசல் ஏற்பட்டது. இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:–

முள்ளிக்கொரை சாலையின் அடிப்பகுதியில் சாக்கடை கழிவுநீர் குழாய் செல்கிறது. இது தெரிந்து இருந்தும் அலட்சியமாக தார்ச்சாலை போடப்பட்டது. இதனால் சில மாதங்களிலேயே சாலை விரிசல் விழுந்து பெயர்ந்து உள்ளது. கிராமத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள், குழந்தைகள் அந்த வழியாகத்தான் நடந்து சென்று வருகிறார்கள். சாலையில் விரிசல் ஏற்பட்டதால் பள்ளி வாகனங்கள் கிராமத்துக்குள் வருவது இல்லை. சுமார் 30 அடி தூரத்துக்கு சாலை பெயர்ந்த நிலையில் காட்சி அளிக்கிறது. இதனால் எப்போது வேண்டுமானாலும் விபரீதம் ஏற்படும் அபாயம் உள்ளது. நேரம் செல்ல, செல்ல சாலையில் விரிசல் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இது ஒருபுறம் இருக்க மற்றொரு புறம் அந்த வழியாக செல்லும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு உள்ளது. அந்த குழாயில் இருந்து தண்ணீர் வெளியேறுவதால் கூடுதலாக விரிசல் ஏற்படுகிறது. சாலையின் நடுவே பெயர்ந்து குழி விழுந்தது போல் காணப்படுவதால், அந்த வழியாக நடந்து சென்றாலும் அல்லது இருசக்கர வாகனத்தில் சென்றாலும் அப்பகுதியை கடக்கும் போது அதிர்வு ஏற்படுகிறது. அதன் காரணமாக வாகன ஓட்டிகள் அவதி அடைந்து உள்ளனர். எனவே, தரம் இல்லாமல் தார்ச்சாலை அமைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, விரிசல் ஏற்பட்டு பெயர்ந்த சாலையை உடனடியாக சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்