மேட்டூர் உபரிநீர் திட்டத்தை செயல்படுத்தக்கோரி சேலம் கலெக்டரிடம் மடிப்பிச்சை ஏந்திய விவசாயி

மேட்டூர் உபரிநீர் திட்டத்தை செயல்படுத்தக்கோரி சேலம் மாவட்ட கலெக்டரிடம் மடிப்பிச்சை ஏந்திய விவசாயி ஒருவரால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update: 2018-08-24 22:48 GMT
சேலம், 

சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ரோகிணி தலைமையில் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமார், வேளாண் இணை இயக்குநர் (பொ) சேகர், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) செல்லதுரை, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராஜேந்திர பிரசாத் உள்பட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

விவசாயிகளின் கிணறுகளை தூர்வார அரசு தேவையான நிதிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும். கருமந்துறையில் உள்ள பழப்பண்ணையில் அனைத்து வகை மரக்கன்றுகளும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கணினி சிட்டா கிடைக்கப்பெறாததால் விவசாயிகள் எந்த கடனும் பெறமுடியவில்லை. எனவே, விவசாயிகளுக்கு கணினி சிட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் பேசினர்.

இதைத்தொடர்ந்து, புளியங்குறிச்சியை சேர்ந்த விவசாயி பெருமாள் பேசுகையில், மேட்டூர் அணை நிரம்பியதால், லட்சக்கணக்கான கனஅடி தண்ணீர் வீணாக கடலில் கலந்தது. இதனால் சேலம் மாவட்ட விவசாயிகளுக்கு எவ்வித பலனும் இல்லை. இந்த தண்ணீரை சேலம் மாவட்ட விவசாயிகள் பயன்படுத்தும் வகையில் மேட்டூர் உபரிநீர் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். இதற்கு மதிப்பீடு தயாரிக்க பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.

மேட்டூர் உபரிநீரை வசிஷ்டநதி, சரபங்கா நதிகள் வழியே திருப்பி விட வேண்டும். மேலும், ராட்சத அளவிலான குழாய்கள் அமைத்து, தண்ணீரை ஏரி, குளங்களில் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி மடிப்பிச்சை ஏந்துவதை தவிர வேறு வழியில்லை என்று கூறியவாறு அவர், கையில் துணியை ஏந்தியபடி மடிப்பிச்சை கேட்டு கலெக்டர் ரோகிணியிடம் கோரிக்கை வைத்தார். இதனால் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து விவசாயி பெருமாளின் கேள்விக்கு பதில் அளித்து கலெக்டர் ரோகிணி பேசும்போது, மேட்டூர் உபரிநீர் திட்டம் குறித்து பரிசீலனை செய்யப்படும். விவசாயிகள் திருந்திய நெல் சாகுபடி தொழில் நுட்பங்களை பயன்படுத்தி அதிக மகசூல் பெற்று பயன்பெற வேண்டும். வேளாண் எந்திரமயமாக்கும் திட்டத்தின் கீழ் மானிய விலையில் எந்திரங்கள் மற்றும் கருவிகள் பெற விரும்பும் விவசாயிகள் உழவன் செயலியின் மூலம் பதிவு செய்து பயன்பெறலாம், என்றார். முன்னதாக வேளாண்மை அறிவியல் நிலையம் மூலம் மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்தும் முறைகள், திருந்திய நெல் சாகுபடி குறித்து படக்காட்சி மூலமாக விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்