கட்டிடதொழிலாளியை கத்தியால் குத்தி கொலை: 5 பேர் கைது

கட்டிட தொழிலாளியை கத்தியால் குத்தி கொலை செய்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2018-08-25 00:00 GMT
கோவை,

கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள எஸ்.ஐ.எச்.எஸ். காலனியை சேர்ந்தவர் பாபு (வயது 45), கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி பாக்கியலட்சுமி. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். இந்த நிலையில் பாபு, கோவை விமான நிலையத்தின் பின்புறம் உள்ள ஆயிரம் சாலை பகுதியில் கத்தியால் குத்தப்பட்டு உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தார்.

அவரை போலீசார் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியில் பாபு பரிதாபமாக இறந்தார். இது குறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்ததில், 5 பேர் கொண்ட மர்ம ஆசாமிகள் பாபுவை கத்தியால் குத்தி கொன்றது தெரியவந்தது.

இதையடுத்து அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விமான நிலையத்தின் பின்பகுதியில் சந்தேகத்துக்கு இடமாக நின்றிருந்த 5 பேரை பிடித்து விசாரணை செய்தனர். அதில் அவர்கள் கோவை சவுரிபாளையத்தை சேர்ந்த பூசாரி மணி (வயது 20), நீலிக்கோணம்பாளையத்தை சேர்ந்த மோகன்பாபு (23), நவீன்குமார் (21), சசிமோகன் (25), ஆனந்தராஜ் (24) என்பதும், பாபுவை அவர்கள் கத்தியால் குத்திக்கொலை செய்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் கொலை மற்றும் வழிப்பறி செய்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 5 பேரையும் கைது செய்தனர். கொலை பற்றி அவர்கள் 5 பேரும் அளித்த பரபரப்பு வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது:-

பாபு, தனது நண்பர் நெல்சனுடன் மது குடித்து விட்டு மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டு இருந்தார். அப்போது அவர்களை 5 பேர் வழி மறித்தனர். பின்னர் அவர்கள் கத்தியை காட்டி மிரட்டி நெல்சனிடம் மது குடிக்க பணம் கேட்டுள்ளனர். உடனே அவர் தன்னிடம் பணம் இல்லை என்று கூறினார்.

இதனால் அவரை விட்டுவிட்டு பின்னால் அமர்ந்து இருந்த பாபுவிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டனர். அவரும் தன்னிடம் பணம் இல்லை என்று கூறியுள்ளார். ஆனாலும் அவர்கள் விடாமல் பாபுவின் சட்டைப்பையில் கையை விட்டு பணம் இருக்கிறதா? என்று பார்த்தனர். இதில் ஆத்திரம் அடைந்த பாபு, அவர்களின் கையை தட்டிவிட்டார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த நெல்சன் தனது மோட்டார் சைக்கிளை அங்கேயே போட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டார். தகராறு முற்றியதால் அவர்கள் 5 பேரும் சேர்ந்து பாபுவை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதை அறிந்த போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி 5 பேரையும் மடக்கி பிடித்து விட்டனர்.

இவ்வாறு அவர்கள் வாக்குமூலத்தில் கூறியிருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

கைதான 5 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்