போத்தனூரில் புதிதாக திறக்கப்பட்ட மேம்பாலத்தில் வாகனங்கள் தாறுமாறாக செல்வதால் விபத்து ஏற்படும் அவலம்

போத்தனூரில் புதிதாக திறக்கப்பட்ட மேம்பாலத்தில் வாகனங்கள் தாறுமாறாக செல்வதால் தினமும் விபத்து ஏற்படும் அவல நிலை உள்ளது. எனவே போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Update: 2018-08-24 22:37 GMT

கோவை,

கோவையை அடுத்த போத்தனூரில் இருந்து செட்டிபாளையம் செல்லும் ரோட்டில் ரெயில் தண்டவாளம் குறுக்கிடுகிறது. இங்குள்ள ரெயில்வே கேட் வழியாக ரெயில் வரும்போது அடிக்கடி மூடப்பட் டது. இதனால் சாலையின் இருபுறத்திலும் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்து நின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

எனவே அங்கு மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து ரெயில்வே கேட் அருகே ரூ.32 கோடி மதிப்பில் மேம்பாலம் கட்டப்பட்டது. பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து கடந்த மாதம் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக மேம்பாலம் திறக்கப்பட்டது.

போத்தனூரில் இருந்து செட்டிபாளையம் ரோட்டில் செல்பவர்கள் மேம்பாலம் வழியாக செல்லலாம். போத்தனூரில் இருந்து பொள்ளாச்சி செல்பவர்கள் சாரதா மில் ரோட்டை அடைய மேம்பாலத்தின் இடதுபுறம் வழியாக கீழே சென்று யு வடிவில் திரும்ப வேண்டும். ஆனால் வாகன ஓட்டிகள் அவ்வாறு செல்வது இல்லை.

மேம்பாலத்தில் வாகனங்கள் ஏறும் இடத்திலேயே சில வாகன ஓட்டுனர்கள் வலதுபுறம் திரும்பி சாரதாமில் ரோட்டிற்கு செல்கின்றனர். இதனால் எதிரே வரும் வாகனங்கள் மோதி தினசரி விபத்து ஏற்பட்டு வருகிறது. இதை தடுக்கும் வகையில் மேம்பாலத்தில் வாகனங்கள் ஏறும் இடத்தின் முன், வாகனங்கள் எப்படி செல்ல வேண்டும் என்பதை குறிக்கும் வகையில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு உள்ளது.

ஆனால் அதையும் மீறி மேம்பாலத்தில் எதிரே வாகனங்கள் வருவதை பொருட்படுத்தாமல் 100 மீட்டர் தூரத்துக்கு எதிர்திசையில் சென்று சாரதாமில் ரோட்டை சில வாகன ஓட்டுனர்கள் அடைகின்றனர். இது போன்று போக்குவரத்து விதிகளை மீறுவதே தினசரி விபத்து ஏற்படுவதற்கு காரணமாகி விடுகிறது.

இது குறித்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கூறியதாவது:–

இந்த மேம்பாலம் கட்டப்பட்டதால், வாகன ஓட்டிகள் எவ்வித சிரமமும் இல்லாமல் ரெயில் தண்டவாளத்தை கடந்து செட்டிபாளையம் வருகிறார்கள். ஆனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டி களில் சிலர் போக்குவரத்து விதிமுறைகளை மதிப்பது கிடையாது. அதாவது போத்தனூரில் இருந்து சாரதா மில் ரோட்டிற்கு செல்பவர்கள் மேம்பாலத்தின் கீழ்ப்பகுதி வழியாக தான் செல்ல வேண்டும். இதற்காக அங்கு ரோட்டின் நடுவே தடுப்பு சுவர் வைக்கப்பட்டு உள்ளது.

அதையும் மீறி, சிலர் வாகன தடுப்பு சுவருக்கு முன்பாகவே வலதுபுறம் திரும்பி, எதிரே வாகனங்கள் வந்தாலும் அதை கண்டுகொள்ளாமல் தாறுமாறாக செல்கிறார்கள். செட்டிபாளையம் ரோட்டில் இருந்து வாகனங்கள் வேகமாக வருவதால், போத்தனூர் ரோட்டில் இருந்து விதிமுறைகளை மீறி ஒருவழி பாதையில் செல்வதால் தினமும் அங்கு விபத்துகள் நடைபெற்று வருகின்றன.

இருசக்கர வாகன ஓட்டிகள் தான் அவ்வாறு போக்குவரத்து விதிமுறைகளை மீறுகிறார்கள் என்றால், மினிடெம்போ, லாரிகள், தனியார் பஸ்கள் கூட சில நேரங்களில் விதிமுறைகளை மீறி ஒருவழிபாதை யில் தாறுமாறாக செல்கின்றன. பள்ளி குழந்தைகளை ஏற்றிச்செல்லும் வாகனங்களும் இதுபோன்று தான் செல்கிறது. இது குறித்து அங்கு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டும் யாரும் அதை கண்டுகொள்வது இல்லை.

போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக தான் இந்த மேம்பாலம் கட்டப்பட்டது. ஆனால் வாகன ஓட்டிகள் சிலர் போக்குவரத்து விதிகளை மீறி செல்வதால் தினமும் விபத்துகள் நடக்கும் மேம்பாலமாக மாறிவிட்டது. அங்கு காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை போக்குவரத்து போலீசாரை நியமித்து, விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, விபத்துகள் நடப்பதை தடுக்கலாம்.

இது தொடர்பாக சிலர் கோவை மாநகர போலீஸ் கமி‌ஷனர் பெரியய்யாவை சந்தித்து மனுவும் கொடுத்து உள்ளனர். எனவே போத்தனூர் மேம்பாலம் பகுதியில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு போலீஸ் கமி‌ஷனர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்