தமிழக அரசு உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த வேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பேட்டி

தமிழக அரசு உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறினார்.

Update: 2018-08-24 22:45 GMT

திருப்பூர்,

சொத்து வரி உயர்வை திரும்ப பெற வேண்டும், உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பாக நேற்று மாலை, திருப்பூர் மாநகராட்சி முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் முத்துக்கண்ணன் தலைமை தாங்கினார். இதில் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் தங்கவேல், மாநிலக்குழு உறுப்பினர் காமராஜ் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.

ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷமிட்டனர். இதில் தெற்கு ஒன்றிய செயலாளர் மூர்த்தி, குடிமங்கல செயலாளர் சசிகலா உள்பட பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தையொட்டி திருப்பூர் தெற்கு போலீசார் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்து.

முன்னதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகள் உள்ளிட்ட அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் சொத்து வரி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடக்கிறது. பல காரணங்களை காட்டி உள்ளாட்சி தேர்தலை மாநில அரசு தள்ளிப்போட்டு வருகிறது.

தேர்தல் நடத்தாத காரணத்தினால் கடந்த 1½ ஆண்டில் மத்திய அரசு கொடுக்க வேண்டிய 5 ஆயிரத்து 300 கோடி ரூபாய் கிடைக்கவில்லை. இதற்கு மாநில அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். திருப்பூர் உள்ளிட்ட நகரங்களில் ஜி.எஸ்.டி., பணமதிப்பு இழப்பு நடவடிக்கையால் சிறு, தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி.யால் திருப்பூர் ஏற்றுமதியாளர்களுக்கு வரி சலுகைகள் கொடுக்காமலும், வரியை வசூலித்துவிட்டு திரும்ப பெறும் தொகையை மத்திய அரசு திரும்ப கொடுக்காமலும் இருக்கிறது.

இதனால் சிறு உற்பத்தியாளர்களுக்கு கிடைக்க வேண்டிய பணம் 3 ஆயிரம் கோடி முதல் 4 ஆயிரம் கோடி வரை கிடைக்கவில்லை. இதனால் பின்னலாடை தொழில் தடுமாறி வருகிறது. மாநில முதல்–அமைச்சர் மீதும், துணை முதல்–அமைச்சர் மீதும் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக கூறுகிறார்கள்.

இந்த விசாரணை முறையாக நடக்க வேண்டும் என்றால், இருவரும் பதவியை ராஜினாமா செய்து விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும். மேலும், தமிழக அரசு உடனே உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த வேண்டும். உள்ளாட்சி தேர்தல் நடத்தி மக்கள் பிரதிநிதிகள் தான் சொத்து வரியை உயர்த்துவது குறித்து தீர்மானிக்க வேண்டும். இதற்கு மாறாக அதிகாரிகளை வைத்து வரியை உயர்த்த கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்