உதவி பேராசிரியர் மீது பாலியல் தொல்லை புகார்: ஒழுங்கு நடவடிக்கை குழுவின் விசாரணைக்கு வர மாணவி மறுப்பு

உதவி பேராசிரியர் மீது பாலியல் தொல்லை புகார் அளித்த மாணவி ஒழுங்கு நடவடிக்கை குழுவினர் விசாரணைக்கு அழைத்து போது வரவில்லை.

Update: 2018-08-24 22:45 GMT
வாணாபுரம்,

திருவண்ணாமலை மாவட்டம் வாணாபுரம் அருகே வாழவச்சனூரில் உள்ள அரசு வேளாண்மை கல்லூரியில் சென்னையை சேர்ந்த மாணவி ஒருவர் படித்து வருகிறார். விடுதியில் தங்கி படிக்கும் தனக்கு, உதவி பேராசிரியர் தங்கபாண்டியன் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், மேலும் பாலியல் தொல்லைக்கு விடுதி காப்பாளர்களாக உள்ள கல்லூரி பேராசிரியைகள் ஆகியோர் செயல்பட்டதாகவும் புகார் கூறினார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மாணவி திருவண்ணாமலை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி மகிழேந்தி முன்னிலையில் ஆஜராகி, பாலியல் தொந்தரவு குறித்து வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து, நீதிபதி மகிழேந்தி வேளாண் கல்லூரிக்கு நேரில் சென்று கல்லூரி முதல்வர், உதவி பேராசிரியர் மற்றும் பேராசிரியைகள், மாணவ, மாணவிகள், அலுவலகத்தில் பணிபுரிபவர்கள் என பல்வேறு தரப்பினரிடம் விசாரணை நடத்தினார்.

இதையடுத்து மாணவியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்ரவர்த்திக்கு பரிந்துரை செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்பேரில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வனிதா தலைமையிலான தனிப்படை போலீசார் கல்லூரிக்கு சென்று விசாரணை நடத்தினார்.

இதற்கிடையில் புகார் கூறப்பட்ட உதவி பேராசிரியர் தங்கபாண்டியன் மற்றும் விடுதி காப்பாளர்களான பேராசிரியைகள் மாணவிக்கு எதிராக வாணாபுரம் போலீசில் புகார் அளித்தனர். புகாரில் மாணவியின் பாலியல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யாக ஜோடிக்கப்பட்டவை. எங்கள் பெயர்களுக்கு களங்கம் ஏற்படுத்தவே, இதுபோன்ற புகார்களை கூறி உள்ளார்.

கல்லூரியில் சக மாணவ, மாணவிகளுடைய ஐ.டி. கார்டுகள், பென்சில், பேனா மற்றும் ரப்பர் போன்ற பொருட்களை மாணவி திருடியுள்ளார். இதுபோன்று பல திருட்டு சம்பவங்களில் மாணவி ஈடுபட்டுள்ளார். கல்லூரி நிர்வாகத்துக்கு எதிராக பொய் புகார் தெரிவித்த மாணவி மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி உள்ளனர்.

இந்த புகார் குறித்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வனிதா தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 2-வது நாளாக நேற்று காலையும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வனிதா, மாணவி வெளியிட்ட ஆடியோ மற்றும் வாக்குமூலத்தின் அடிப்படையில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வனிதா கூறுகையில், ‘கல்லூரியில் மாணவிகள் மற்றும் பேராசிரியர்களிடம் புகார் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். விசாரணை அறிக்கை போலீஸ் சூப்பிரண்டிடம் தாக்கல் செய்யப்பட்டு அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

விடுதியில் போலீசார் ஆய்வு செய்தபோது, மாணவி தங்கியிருந்த அறையின் தாழ்ப்பாள் உடைக்கப்பட்டு இருந்தது. தனி அறையில் தங்க வைக்கப்பட்டு மாணவி தனிமைப்படுத்தப்பட்டதும், சக மாணவிகள் உள்பட யாரிடமும் பேசாதபடி மன உளைச்சல் ஏற்படுத்தியதும் தெரியவந்துள்ளது.

இரவு நேரத்தில் உதவி பேராசிரியர் தங்கபாண்டியன் விடுதிக்கு வந்து சென்றதாகவும், அப்போது தனக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாகவும் புகாரில் மாணவி கூறி இருந்தார். தாழ்ப்பாள் உடைக்கப்பட்டு மாணவியை தனிமைப்படுத்தியது ஏன் என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

மேலும், கோவையில் இருந்து வந்த வேளாண்மை பல்கலைக்கழக ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் சாந்தி மற்றும் அலுவலர்கள் அடங்கிய குழு கல்லூரி முதல்வர், பேராசிரியைகள், மாணவ, மாணவிகளிடம் விசாரணை நடத்தினர். இதற்கிடையே, பாலியல் புகாருக்குள்ளான உதவி பேராசிரியர் தங்க பாண்டியன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலும் மாணவி விடுதியை விட்டு வெளியேறி விட்டார்.

இந்த வேளாண்மை கல்லூரியில் தேர்வு நடைபெற்று வருவதினால், பாதிக்கப்பட்ட மாணவி நேற்று காலை போலீஸ் பாதுகாப்புடன் தேர்வு எழுத வந்தார்.

தேர்வு முடிந்து அவர் வெளியே செல்லும் போது மாணவியிடம், வாணாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் சுபா ஆகியோர் பேசினர். அப்போது உங்கள் மீது புகார் அளிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து விசாரணைக்கு வரும்படி தெரிவித்தனர். அத்துடன் அதற்கான சம்மனில் கையெழுத்து போடும்படியும் கேட்டனர். அதற்கு அந்த மாணவி, விசாரணைக்கு வரமறுப்பு தெரிவித்தும் சம்மனில் கையெழுத்து போடாமலும் அங்கிருந்து சென்றார்.

முன்னதாக நேற்று 2-வது நாளாக வேளாண்மை பல்கலைக்கழக ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் சாந்தி மற்றும் அலுவலர்கள் அடங்கிய குழுவினர் விசாரணை நடத்த கல்லூரிக்கு வந்தனர். அவர்கள் பாதிக்கப்பட்ட மாணவியை விசாரணைக்கு வருமாறு அழைத்தனர். ஆனால் அவர் வர மறுத்துவிட்டார்.

இதையடுத்து உதவி பேராசிரியர் தங்கபாண்டியன், அவருக்கு உதவியதாக கூறிய பேராசிரியைகள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், மாணவியின் தோழிகள், மாணவிகள் ஆகியோரிடம் அவர்கள் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.

பின்னர் வெளியே வந்த உதவி பேராசிரியர் தங்கபாண்டியன் கூறுகையில், ‘என் மீது தவறான குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. இதனை சட்டரீதியாக சந்திப்பேன். ஊடகம் மூலம் இந்த விவகாரம் பெரிதானதால் என்னை பணியிடை நீக்கம் செய்துள்ளனர்’ என்றார்.

விசாரணை நடத்தியது குறித்து வேளாண்மை பல்கலைக்கழக ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் சாந்தி கூறுகையில், ‘இந்த விசாரணைக்கு பாதிக்கப்பட்ட மாணவி வர மறுத்துள்ளார். இதுதொடர்பாக அனைவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்படும்’ என்றார்.

மேலும் செய்திகள்