சார்பதிவாளர் அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை

குளித்தலை சார்பதிவாளர் அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2018-08-24 21:56 GMT
குளித்தலை,

திருச்சி- கரூர் தேசிய நெடுஞ்சாலையில் குளித்தலை நீதிமன்றம் அருகேயும் போலீஸ் நிலையத்தின் எதிரேயும் குளித்தலை சார்பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வந்தது. இங்கு தினசரி குளித்தலை நகரம் மற்றும் குளித்தலை சுற்றியுள்ள சுமார் 80-க்கும் மேற்பட்ட கிராமப்பகுதியில் உள்ளவர்கள் நிலம், வீட்டு மனை, வீடு போன்றவற்றை வாங்க, விற்க, பத்திரப்பதிவு செய்யவும், திருமணப்பதிவு, வில்லங்க சான்றிதழ் பெறுதல், அடமான கடன் பெறுதல் போன்ற தங்களின் பல்வேறு தேவைக்காக வந்து செல்வார்கள். இந்த அலுவலக கட்டிடம் 1905-ம் ஆண்டு சுமார் 35 செண்ட் அளவுள்ள நிலத்தில் கட்டப்பட்டு செயல்பட்டு வந்தது. பழமையான கட்டிடம் என்பதாலும், கட்டிடம் கட்டப்பட்டு சுமார் 112 ஆண்டுகளுக்கு மேல் ஆனதாலும் இக்கட்டிடம் வலுவிழக்க தொடங்கியுள்ளது.

இதன்காரணமாக இந்த கட்டிடத்தில் அலுவலகத்தை செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இந்த பழைய கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டும் வரை வாடகை கட்டிடத்தில் அலுவலகத்தை செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனைதொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு குளித்தலை பெரியபாலம் பரிசல்துறை சாலையில் உள்ள தனியாருக்கு சொந்தமான கட்டிடம் ஒன்றில் சார்பதிவாளர் அலுவலகம் மாற்றப்பட்டு செயல்படத்தொடங்கியது.

குளித்தலையை சுற்றியுள்ள கிராமப்பகுதியை சேர்ந்தவர் பலர் தங்களின் பல்வேறு தேவைக்காக தங்கள் ஊரில் இருந்து குளித்தலைக்கு பஸ்களில் வருவதுண்டு. பழைய அலுவலகம் அமைந்திருந்த இடம் குளித்தலை பஸ்நிலையத்தில் இருந்து சிறிது தூரம் நடந்து செல்லும் தொலைவில் இருந்தது. அதனால் பொதுமக்கள் சுலபமாக நடந்து சென்று வந்தனர். ஆனால் தற்போது குளித்தலை பஸ்நிலையத்தில் இருந்து சுமார் 1½ கிலோ மீட்டர் தூரம் உள்ள பெரியபாலம் பரிசல்துறை சாலையில் இந்த அலுவலகம் செயல்பட்டுவருவதால். பலர் நீண்ட தூரம் நடந்து செல்லமுடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்த சூழ்நிலையில் பழைய சார்பதிவாளர் கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்ட பத்திரப்பதிவு துறை மூலம் நிதி ஒதுக்கீடு செய்ய எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் காலம் தாழ்த்தப்பட்டுவருவதாக கூறப்படுகிறது. எனவே பொதுமக்களின் நலன் கருதி உடனடியாக புதிய கட்டிடம் கட்ட தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்