100 நாள் வேலை திட்டத்தின்கீழ் தனிநபர், விவசாயிகள் பயன்பெறும் வகையில் பணிகள் மேற்கொள்ளலாம், கலெக்டர் லதா தகவல்

100 நாள் வேலை திட்டத்தின்கீழ் தனிநபர் விவசாயிகள் பயன்பெறும் வகையில் பணிகள் மேற்கொள்ளலாம் என்று கலெக்டர் லதா தெரிவித்துள்ளார்.

Update: 2018-08-24 22:15 GMT

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டத்தில் 2018–19–ம் ஆண்டிற்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் தனிநபர் மற்றும் விவசாயிகள் பயன்பெறும் வகையில் பின்வரும் பணிகளை மேற்கொள்ளலாம். தனிநபர் விவசாய நிலங்களில் பலன் தரும் மரக்கன்று நடுதல், கல் வரப்புகள் மற்றும் மண் வரப்புகள் அமைத்தல், காளான் வளர்ப்பு கூடம் அமைத்தல், தனிநபர் நிலத்தில் மழைநீர் தேக்க குழிகள் அமைத்தல், தனிநபர் நிலங்களில் பண்ணைக்குட்டைகள், திறந்தவெளி கிணறு உள்ளிட்டவை அமைத்தல் மற்றும் மாட்டு பசுந்தீவனங்கள் வளர்க்க அடிப்படை கட்டமைப்பு அமைத்தல் உள்ளிட்டவை மேற்கொள்ளலாம்.

100 நாள் வேலை திட்டத்தின்கீழ் மேற்கண்ட பணிகளை மேற்கொள்ள பெண்ணை தலைமையாக கொண்ட குடும்பம், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேலும் இத்திட்டத்தில் பயனடைய விரும்பும் நபர்கள் 100 நாள் வேலை திட்ட அடையாள அட்டையினை பெற்றவராக இருத்தல் வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் சிறு, குறு விவசாயிகளாக இருத்தல் வேண்டும்.

இதுதவிர மாட்டு தீவனங்கள்(அசோலா) வளர்க்க அடிப்படை கட்டமைப்பு அமைத்தல், ஆடு, மாடு, கோழி கொட்டகை அமைத்தல் ஆகிய பணிகளுக்கு பெண் சுயஉதவிக்குழுவில் உறுப்பினராக இருத்தல் வேண்டும்.

எனவே, பணிகளை மேற்கொள்ள விரும்பும் பயனாளிகள், விவசாயிகள் ஸ்மார்ட் சிவகங்கை என்ற செல்போன் செயலி மூலம் விண்ணப்பித்து பயனடையலாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்