பட்டுக்கோட்டையில் உதவி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
கல்லணைக்கால்வாயில் கடைமடை பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடக்கோரி பட்டுக்கோட்டையில் உதவி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட 1,500 விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.
பட்டுக்கோட்டை,
கல்லணைக்கால்வாய் மூலம் தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய 3 தாலுகாக்களும் புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி, ஆவுடையார் கோவில், ஆலங்குடி, மணமேல்குடி ஆகிய பகுதிகளில் 2 லட்சத்து 27 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெற்று வந்தது. கல்லணையிலிருந்து 150 கிலோ மீட்டர் தூரம் 25-க்கும் மேற்பட்ட பெரிய வாய்க்கால், 300-க்கு மேற்பட்ட கிளை வாய்க்கால்கள் மூலம் கடைமடைக்கு தண்ணீர் செல்கிறது. இப்பகுதியில் 694 பாசன ஏரி, குளங்களும் உள்ளதாக கணக்கிடப்பட்டாலும் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி ஏரிகள் ஓடைகளாகவும், குளங்கள் குட்டைகளாகவும் மாறி வறண்டுபோய் உள்ளன.
பல இடங்களில் குளங்கள் இருந்த இடமே தெரியாமல் போய்விட்டது. பல ஆண்டுகளாக தூர்வாரும் பணி நடைபெறாததால் வாய்க்கால்கள் தூர்ந்து மதகுகள், திறப்பு அடைப்புகள் முற்றிலும் பழுதடைந்து பயனின்றி உள்ளன. இந்த ஆண்டு குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ.315 கோடி ஒதுக்கப்பட்டதாக கூறப்பட்டாலும் கல்லணைக்கால்வாய் பாசன பகுதியில் 5 சதவீதம் கூட தூர்வாரும் பணிகள் நடைபெறவில்லை என்று விவசாயிகள் கூறுகின்றனர்.
கல்லணைக்கால்வாயை முற்றிலுமாக நவீனப்படுத்தி வாய்க்கால் கரைகளை பலப்படுத்தவும், ஏரிகளை தூர்வாருதல், மதகுகளை சீரமைத்தல் போன்ற பணிகளுக்காக ரூ. 2 ஆயிரத்து 158 கோடியே 68 லட்சம் செலவில் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு நிர்வாக அனுமதி கிடைத்தும் அந்த திட்டம் நிறைவேற்றப்படாமல் 2 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக கல்லணைக் கால்வாய் கடைமடை பகுதிக்கு தண்ணீர் வந்து சேரவில்லை அதற்கான நடவடிக்கைகளையும் சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம் எடுக்கவில்லை என்று விவசாயிகள் கூறுகின்றனர். இதன் காரணமாக கல்லணைக்கால்வாய் கடைமடை பகுதிக்கு இதுவரை தண்ணீர் வந்து சேராததால் பட்டுக்கோட்டை, மதுக்கூர், பேராவூரணி, சேதுபாவாசத்திரம் பகுதிகளை சேர்ந்த அனைத்துக்கட்சி விவசாயிகள் ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்தபடி கடைமடை பாசனத்திற்கு கடைமடை கடைசி வரை முழு அளவு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று வலியுறுத்தி நேற்று காலை 9.30 மணி அளவில் பட்டுக்கோட்டை உதவிகலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் தொடங்கியது.
தயார் நிலையில் இருந்த போலீசார் உடனே உதவி கலெக்டர் அலுவலக வாயில் கேட்டை பூட்டி காவலுக்கு நிறுத்தப்பட்டனர். உதவி கலெக்டர் அலுவலக வாயிலை அனைத்துக்கட்சி விவசாயிகள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதே நேரத்தில் உதவி கலெக்டர் அலுவலக வாயில் முன்பு பட்டுக்கோட்டை திருத்துறைப்பூண்டி சாலையில் கொளுத்தும் வெயிலில் உட்கார்ந்து பஸ் மறியல் போராட்டமும் நடைபெற்றது. இதனால் 3 மணி நேரம் பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
போராட்டத்திற்கு தஞ்சை மாவட்ட தி.மு.க. துணைச்செயலாளர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். இதில் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் வா.வீரசேனன், ஆர்.இளங்கோ (தி.மு.க), ஆர்.ராமசாமி, யோகானந்தம் (காங்), ஆர்.சி.பழனிவேலு (மா.கம்யூ), ஆர்.திருஞானம் (இ.கம்யூ), முருகேசன் (தே.மு.தி.க), அய்யாவு (பா.ஜ), பாலு (பா.ம.க), ஏ.கே.குமார் (த.மா.கா), உஞ்சைஅரசன் (விடுதலை சிறுத்தை), வக்கீல் அண்ணாதுரை (தி.க), காரிமுத்து (ம.தி.மு.க), பாண்டியராஜன் (அ.ம.மு.க) அதிராம்பட்டினம் பேரூராட்சி முன்னாள் தலைவர் அஸ்லம், விவசாயிகள் சங்க தலைவர் லெனின் உள்பட பலர் பேசினர். அதற்கிடையில் போலீசார் கலைந்து செல்லும்படி போராட்டக்காரர்களை வலியுறுத்தினர். ஆனால் மாவட்ட கலெக்டர், மாவட்ட வருவாய் அலுவலர், கல்லணைக்கால்வாய் செயற்பொறியாளர் ஆகியோர் வந்து பேச்சு வார்த்தை நடத்தும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று விவசாயிகள் கோஷங்களை எழுப்பி கொளுத்தும் வெயிலில் நடுரோட்டில் உட்கார்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டனர். போராட்டம் நடத்தியவர்களை பார்த்து கலைந்து செல்லுங்கள் இல்லை என்றால் கைது செய்வோம் என்று போலீஸ் துணை போலீஸ் சூப்பிரண்டு செங்கமலக்கண்ணன் கூறினார். ஆனால் கலைந்து செல்லமாட்டோம் போராட்டம் தொடரும் என்று போராட்டக்காரர்கள் கூறினர்.
அலுவலக வாயிலை முற்றுகையிட்டும், சாலை மறியல் செய்த 1,500 விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.