சிவகாசி அருகே அ.தி.மு.க. பிரமுகர் வீடு மீது வெடிகுண்டு வீச்சு, போலீசார் விசாரணை
சிவகாசி அருகே அ.தி.மு.க பிரமுகரின் வீடு மீது மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் வெடிகுண்டை வீசி விட்டு தப்பிச்சென்றனர். இதுகுறித்து 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.;
தாயில்பட்டி,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள வெம்பக்கோட்டையை சேர்ந்தவர் ராஜபாண்டி (வயது 40). அ.தி.மு.க. பிரமுகர். மேலும் மீனவர் கூட்டுறவு சங்க தலைவராகவும் இருந்துள்ளார்.
ராஜபாண்டி வெம்பக்கோட்டை பஸ் நிலையத்தில் இனிப்பு கடை வைத்துள்ளார். அங்கு போலீசாருக்கான குடியிருப்பு அருகே இவரது வீடு அமைந்துள்ளது.
இவர் நேற்று முன்தினம் இரவு கடையை மூடிவிட்டு வீட்டுக்கு வந்தார். இரவு 10.30 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் வீட்டின் மீது திடீரென வெடிகுண்டை வீசிவிட்டு தப்பிச் சென்றனர்.
அது வராண்டாவில் விழுந்து பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் அதிர்ஷ்டவசமாக வீட்டில் இருந்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஆனால் வீட்டு சுவரில் விரிசல் ஏற்பட்டது. பயங்கர சத்தம் எழும்பியதால் அக்கம்பக்கத்தினர் பதற்றம் அடைந்தனர். சிறிது நேரத்துக்கு பின்னர்தான் குண்டு வெடித்திருப்பது தெரியவந்தது. இதனால் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அங்கு திரண்டனர்.
இந்த சம்பவம் குறித்து வெம்பக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சாத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு(பொறுப்பு) ராஜா, சப்–இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விருதுநகரில் இருந்து வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசாரும் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் சிதறல்களை சேகரித்தனர். அப்போது வீட்டில் வீசப்பட்டது நாட்டு வெடிகுண்டு என்று தெரியவந்தது.
மேலும் மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. அது குண்டு வெடித்த இடத்தில் மோப்பம் பிடித்துவிட்டு, அங்குள்ள தெருக்கள் வழியாக சுமார் 1 மணி நேரம் அங்கும் இங்குமாக ஓடி முடிவில் மெயின்ரோட்டில் நின்று விட்டது. யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.
ராஜபாண்டி வீடு மீது வெடிகுண்டு வீசியதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடக்கிறது. முன்னாள் கூட்டுறவு சங்க தலைவரான ராஜபாண்டி மீண்டும் தேர்தலில் போட்டியிட முனைப்பு காட்டி வந்துள்ளார். அதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்ததோடு மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இந்த பிரச்சினையில்தான் அவரது வீட்டில் வெடிகுண்டு வீசப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
மேலும் இதுதொடர்பாக சந்தேகத்தின் பேரில் 2 பேரை போலீசார் மடக்கினர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதில் துப்புத்துலக்க 3 தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் தொடர்ந்து பரபரப்பு நிலவுகிறது. இந்த நிலையில் கூட்டுறவு தேர்தலில் போட்டியிட ராஜபாண்டி நேற்று மனுதாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.