இறக்குமதி வர்த்தக கொள்கைகளில் திருத்தம் செய்ததை ரத்து செய்ய வேண்டும்: மத்திய அரசுக்கு எதிராக, ஐகோர்ட்டில் வேதாந்தா நிறுவனம் வழக்கு

ஏற்றுமதி –இறக்குமதி வர்த்தக கொள்கைகளில் திருத்தம் செய்ததை ரத்துசெய்யக்கோரி வேதாந்தா நிறுவனம் சார்பில் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Update: 2018-08-24 23:15 GMT

மதுரை,

தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் உள்ள வேதாந்தா நிறுவனம் (ஸ்டெர்லைட் ஆலை) சார்பில் ஜானகிராம் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–

மத்திய வர்த்தக அமைச்சகம் 2015–2020–ம் ஆண்டுகளுக்கான வெளிநாடு வர்த்தக கொள்கையை வகுத்துள்ளது. இந்த கொள்கையில் வரி விலக்கு சலுகை பெற வாய்ப்பு வழங்கப்பட்டு இருந்தது. அதன்படி ஏற்றுமதியாளர்கள் வரி செலுத்தாமல் பொருட்களை இறக்குமதி செய்ய முடியும். மேலும் அடிப்படை சுங்க வரி, கூடுதல் சுங்க வரி, கல்வி வரி, பாதுகாப்பு வரி விலக்கு ஆகியவையும் அளிக்கப்பட்டது.

இந்தநிலையில் கடந்த ஆண்டு (2017) ஜூலை 1–ந்தேதி முதல் ஜி.எஸ்.டி. வரி நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. அதன்பின்னர் ஏற்றுமதியாளர்களுக்கு வழங்கப்பட்ட பல்வேறு சலுகை வாய்ப்புகள் திரும்பப்பெறும்படியாக புதிய விதிகள் அமல்படுத்தப்பட்டன. இது சட்டவிரோதம்.

மேலும் கடந்த ஆண்டு நவம்பர் முதல் இந்த ஆண்டு மார்ச் வரை எங்கள் நிறுவனம் இறக்குமதி செய்த பொருட்களின் விவரத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய வருவாய் புலனாய்வுத்துறை சம்மன் கடந்த ஜூன் மாதம் அனுப்பி உள்ளது.

நேர்மையான வெளிநாட்டு வர்த்தகம் மூலம் இந்தியாவுக்கு அதிகஅளவு அன்னிய செலவாணி கிடைப்பதற்கு எங்கள் நிறுவனம் பெரும் உதவியாக உள்ளது. எனவே ஏற்றுமதி–இறக்குமதி வர்த்தக கொள்கைகளில் புதிய விதிகளை அமல்படுத்தி திருத்தம் செய்ததை ரத்து செய்ய வேண்டும். எங்கள் நிறுவனத்துக்கு அனுப்பிய சம்மன் தொடர்பான விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஜே.நிஷாபானு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கு குறித்து மத்திய நிதி அமைச்சக செயலாளர், வெளிநாட்டு வர்த்தகத்துறை பொது இயக்குனர், மத்திய வருவாய் புலனாய்வுத்துறை துணை இயக்குனர் உள்ளிட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்