மின்சாரம் தாக்கி வாலிபர் சாவு
களியக்காவிளை அருகே மோட்டார் சைக்கிளை சுத்தம் செய்த போது மின்சாரம் தாக்கி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
களியக்காவிளை,
இந்த சோக சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-
களியக்காவிளை அருகே பளுகல், கூடலூர் கோணத்தை சேர்ந்தவர் வினு. இவருடைய மகன் வினோத் (வயது 19). பிளஸ்-2 முடித்துள்ள இவர் இளஞ்சிறை பகுதியில் உள்ள ஒரு ஒர்க் ஷாப்பில் வேலை செய்து வந்தார்.
நேற்று முன்தினம் மாலை ஒரு மோட்டார் சைக்கிளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அந்த இடத்தில் ஒயரில் மின்கசிவு இருந்ததாக தெரிகிறது. எதிர்பாராதவிதமாக அவர் அந்த ஒயரை தொட்டதாக தெரிகிறது. இதனால் அவர் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். உடல் கருகிய நிலையில் கிடந்த அவரை சக தொழிலாளர்கள் மீட்டு காரக்கோணத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி வினோத் பரிதாபமாக இறந்தார். இது குறித்து பளுகல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. வினோத்தின் உடலை போலீசார் கைப்பற்றி குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து பளுகல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மோட்டார் சைக்கிளை சுத்தம் செய்த போது மின்சாரம் தாக்கி வாலிபர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.