பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோட்டில் அரசு டாக்டர்கள் ஊர்வலம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோட்டில் அரசு டாக்டர்கள் ஊர்வலமாக சென்றனர்.

Update: 2018-08-24 22:00 GMT

ஈரோடு,

மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அரசு டாக்டர்களுக்கு உரிய அனைத்து பணப்படிகளையும் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

கடந்த 1–ந் தேதி முதல் 3–ந் தேதி வரை தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி அடையாள அட்டை அணிந்து பணிபுரிந்தனர். கடந்த 20–ந் தேதி தமிழகம் முழுவதும் உள்ள அரசு டாக்டர்கள் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் அடுத்த கட்டமாக 24–ந் தேதி (நேற்று) தமிழகம் முழுவதும் உள்ள அரசு டாக்டர்கள் அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் உள்ள கலெக்டர் அலுவலகத்துக்கு ஊர்வலமாக சென்று மனு கொடுக்க வேண்டும் என்று கூட்டமைப்பு சார்பில் முடிவெடுக்கப்பட்டது.

அதன்படி ஊர்வலத்தில் கலந்து கொள்வதற்காக அரசு டாக்டர்கள் ஈரோடு சம்பத் நகர் பகுதியில் நேற்று ஒன்று கூடினார்கள். இந்த ஊர்வலத்துக்கு அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பின் ஈரோடு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஆர்.ரவிச்சந்திரபிரபு தலைமை தாங்கினார்.

இதில் கலந்து கொண்ட அரசு டாக்டர்கள் தங்களின் கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி சென்றனர். சம்பத் நகரில் தொடங்கிய ஊர்வலம் கோர்ட்டு வழியாக சென்று கலெக்டர் அலுவலகத்தில் முடிவடைந்தது. அதைத்தொடர்ந்து அரசு டாக்டர்கள் தங்களின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாவட்ட கலெக்டரிடம் வழங்கினார்கள். ஊர்வலத்தில் அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பின் இணை ஒருங்கிணைப்பாளர்கள் ராமகிருஷ்ணகார்த்தி, ரமேஷ், சிராஜூதின் மற்றும் அரசு டாக்டர்கள் கலந்து கொண்டார்கள்.

மேலும் செய்திகள்