எம்.ஜி.ஆர். ஆட்சியை ரஜினியால் கொடுக்க முடியாது - தமிழ்மகன் உசேன் பேட்டி
எம்.ஜி.ஆர். ஆட்சியை ரஜினியால் கொடுக்க முடியாது என்று ஈரோட்டில் தமிழ்மகன் உசேன் கூறினார்.
ஈரோடு,
அ.தி.மு.க. சார்பில், ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ஆற்றங்கரையில் உள்ள ஹஜ்ரத் ஷேக் அலாவுதீன் பாதுஷா தர்காவில் நேற்று சிறப்பு பிரார்த்தனை நடந்தது. அ.தி.மு.க. கட்சியும், ஆட்சியும் சிறப்பாக நடைபெற வேண்டி இந்த பிரார்த்தனை நடத்தப்பட்டது.
இந்த பிரார்த்தனைக்கு முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். கே.எஸ்.தென்னரசு எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். எம்.ஜி.ஆர். ரசிகர் மன்ற செயலாளரும், வக்பு வாரிய முன்னாள் தலைவருமான தமிழ்மகன் உசேன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, பச்சைபோர்வை மற்றும் மலர் விரிப்பு சாத்தி பிரார்த்தனை செய்தார்.
அதைத்தொடர்ந்து தமிழ்மகன் உசேன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் வழிகாட்டுதலுடன் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் நடைபெறும் இந்த ஆட்சியும், அ.தி.மு.க. கட்சியும் இன்னும் 100 ஆண்டுகள் சிறப்பாக செயல்பட வேண்டி தமிழகம் முழுவதும் உள்ள புகழ்பெற்ற தர்காவில் சிறப்பு பிரார்த்தனை நடந்து வருகிறது.
அதன்படி 9–வது தர்காவாக இன்று (நேற்று) ஈரோடு ஹஜ்ரத் ஷேக் அலாவுதீன் பாதுஷா தர்காவில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்று உள்ளது. முன்னாள் முதல்–அமைச்சர் எம்.ஜி.ஆர். மக்களோடு இருந்தார். மக்களுக்காக வாழ்ந்தார். எம்.ஜி.ஆர். கொடுத்த ஆட்சியை ஒருபோதும் நடிகர் ரஜினியால் கொடுக்க முடியாது. ஆயிரம் ரஜினி வந்தாலும் எம்.ஜி.ஆருக்கு ஈடாகாது.
இவ்வாறு அவர் கூறினார்.