கட்டுமானம், அமைப்புச்சாரா தொழிலாளர்கள் தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்ய சிறப்பு முகாம்

கட்டுமானம், அமைப்புச்சாரா தொழிலாளர்கள் தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்ய சிறப்பு முகாம் சென்னையில் நாளை நடக்கிறது.

Update: 2018-08-24 22:15 GMT
சென்னை,

சென்னை தொழிலாளர் (சமூக பாதுகாப்பு திட்டம்) உதவி கமி‌ஷனர் ந.சேதுராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நல வாரியம், தமிழ்நாடு உடல் உழைப்பு தொழிலாளர் சமூக பாதுகாப்பு மற்றும் நல வாரியம் உள்பட 15 நல வாரியங்களை சேர்ந்தவர்கள், சமூக பாதுகாப்பு திட்டம் மூலம் பதிவு செய்து அடையாள அட்டை பெற்றிருக்க வேண்டும்.

பதிவு செய்து அடையாள அட்டை வைத்திருக்கும் தொழிலாளர்களுக்கு திருமண உதவித் தொகை, பெண் உறுப்பினர்களுக்கான மகப்பேறு, தொழிலாளர்களின் பிள்ளைக்களுக்கான கல்வி உதவித் தொகை, கண் கண்ணாடி, ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், விபத்தில் மரணம், விபத்தில் ஊனம் ஏற்படுதல், இயற்கை மரணம், ஈமச்சடங்கு ஆகியவற்றிற்கு தொழிலாளர் துறை சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

எனவே இதுவரை வாரியத்தில் பதிவு செய்யாத சென்னை மாவட்டத்தை சேர்ந்த கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் புதிதாக பதிவு, புதுப்பித்தல் மற்றும் ஆதார் எண் இணைத்தல் முகாம் வருகிற 26–ந்தேதி (நாளை) வேளச்சேரி 2–வது மெயின் ரோடு, ராஜலட்சுமி நகரில் உள்ள சென்னை மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது.

இந்த முகாமில் 18 வயது முதல் 59 வயது வரை உள்ள கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் அமைப்புச்சாரா தொழிலாளர்கள், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, கல்விச்சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை, வங்கி கணக்கு புத்தகம், 2 பாஸ்போர்ட் புகைப்படம் உள்ளிட்ட ஆவணங்களுடன் வந்து பதிவு செய்துக்கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்