திருப்பரங்குன்றம் அருகே துணைக்கோள் நகரம் அமைக்க நிலத்தை கையகப்படுத்தியதால் விவசாயிகள் போராட்டம்

திருப்பரங்குன்றம் அருகே துணைக்கோள் நகரம் அமைக்க நிலங்களை கையகப்படுத்தியதால் விவசாயிகள் சாலை மறியல் செய்தனர். மரத்தில் ஏறி என்ஜினீயர் தற்கொலை மிரட்டல் விடுத்தார்.

Update: 2018-08-24 22:45 GMT

மதுரை,

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே உச்சப்பட்டி தோப்பூரில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் மூலம் துணைக்கோள் நகரம் அமைக்க பணிகள் நடந்து வருகின்றன.

இதற்காக தோப்பூர் ஊராட்சி மூனாண்டிபட்டியில் 16 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த வீட்டு வசதி வாரியம் முயற்சி மேற்கொண்டது. இதை எதிர்த்து அப்பகுதி விவசாயிகள் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இதற்கிடையில் வீட்டு வசதி வாரிய அதிகாரிகள் ஐகோர்ட்டு உத்தரவின்படி 16 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று அங்கு வந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அப்பகுதியை சேர்ந்த என்ஜினீயர் மகாதேவன் (வயது 28) தென்னை மரத்தில் ஏறி கீழே உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்யப்போவதாக மிரட்டல் விடுத்தார். உடனே போராட்டத்தில் ஈடுபட்டவர்களும், போலீசாரும் அவரை கீழே இறங்குமாறு கேட்டுக்கொண்டனர். இதனால் மகாதேவன் கீழே இறங்கினார்.

பின்னர் பெண்களை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி போலீஸ் வேனில் ஏற்றினர். அப்போது சில பெண்கள் தரையில் படுத்து உருண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதை தொடர்ந்து போலீஸ் பாதுகாப்புடன் அங்கிருந்த ஏராளமான மரங்களை வேரோடு வெட்டி அழித்துவிட்டு விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. தோட்டப்பயிர்களை விவசாயிகளே அப்புறப்படுத்திக்கொள்ள அதிகாரிகள் காலஅவகாசம் கொடுத்தனர்.

நிலங்களை கையகப்படுத்த விவசாயிகளான ஒச்சாத்தேவர், அவருடைய மனைவி சரஸ்வதி ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது இவர்களது மகனான 108 ஆம்புலன்சின் டிரைவர் நீதி, கடமையில் குறிக்கோளாக இருந்து அதிகாரிகள் கூறுவதை கேட்டு பணியில் ஈடுபட்டார்.

அவருடைய தாயார் சரஸ்வதி மயங்கி விழுந்த போதிலும் பெரிதுபடுத்தாமல் போலீசார் உத்தரவுக்கு பிறகே ஆம்புலன்சில் ஏற்றி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.

மேலும் செய்திகள்